உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உத்தரகண்டில் யு.சி.சி., தாக்கம்: பதிவானது முதல் லிவ் இன்

உத்தரகண்டில் யு.சி.சி., தாக்கம்: பதிவானது முதல் லிவ் இன்

டேராடூன்: உத்தரகண்டில், யு.சி.சி., எனப்படும், பொது சிவில் சட்டம் அமலாகி, 10 நாட்கள் ஆன நிலையில், 'லிவ் இன்' உறவுமுறை தொடர்பான முதல் பதிவு நேற்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், பொது சிவில் சட்டம் கடந்த மாதம், 27ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையையும் உத்தரகண்ட் பெற்றது. இந்த சட்டத்தின்படி, திருமணம் செய்யாமல் கணவன் - மனைவியாக லிவ் - இன் உறவு முறையில் வாழ்பவர்களும் அதை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.அவ்வாறு உறவுமுறையில் இருப்பவர்கள் 21 வயதுக்குக் கீழ் இருந்தால், பெற்றோரின் அனுமதி அவசியம் என்றும் சட்டம் சொல்கிறது. லிவ் - இன் உறவுமுறையில் இருப்பவர்கள், பதிவு செய்ய மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனை மற்றும் 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என உத்தரகண்ட் அரசு அறிவித்துள்ளது. இந்த சூழலில், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டதை அடுத்து, லிவ் - இன் உறவுமுறையில் வாழும் ஐந்து ஜோடிகள், அது தொடர்பாக பதிவு செய்ய இணையதளத்தில் விண்ணப்பத்திருந்தனர். இதில், ஒரு ஜோடியின் லிவ் - இன் உறவுமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டு பதிவு செய்யப்பட்டது. உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்ட 10 நாட்களில், லிவ் இன் உறவுமுறைக்கான முதல் பதிவு நேற்று மேற்கொள்ளப்பட்டது. மீதமுள்ள நான்கு விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இங்கு, லிவ் - இன் உறவுமுறையை பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வரும் சிலர், 'இது தனி மனித உரிமை மீறல். இது தொடர்பான பதிவை ரத்து செய்ய வேண்டும்' என, வலியுறுத்தி வருகின்றனர். அதேசமயம், தண்டனையை கருத்தில் வைத்து லிவ் இன் முறையை பதிவு செய்ய பலர் முன்வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஆரூர் ரங்
பிப் 06, 2025 10:52

லிவ் இன் வாழ்க்கை கோர்ட் அங்கீகரிக்கப்பட்ட உ‌த்தரவு. அரசால் தடுக்க முடியாது..ஆனால் குழந்தை உருவாகும் பட்சத்தில் திருமணம் கட்டாயமாக்கப்பட வேண்டும். இவர்கள் அடிக்கும் கூத்தில் பிள்ளைகள் தந்தை அறியாதவர் எனும் அவமானத்தில் சிக்க வேண்டாமே.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 06, 2025 06:59

லிவ் இன் உறவுமுறை எந்த மதக் கொள்கைப்படியும் சரியானதல்ல ....... எதற்காக இந்த அசிங்கம் பாரதத்தில் ??


subramanian
பிப் 06, 2025 11:17

தர்மராஜ், லிவ் இன் முறையில் நிறைய பேர் இருக்கிறார்கள். என்ன செய்வது , ஆசை, அவசரம், மற்றும் திருட்டுத்தனம் செய்யும் தைரியம். இருக்கும் யதார்த்தம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.


J.V. Iyer
பிப் 06, 2025 02:56

அருமை.. அருமை.. உத்தரகண்ட் அரசுக்கு பாராட்டுக்கள்.


புதிய வீடியோ