UPDATED : மார் 29, 2025 05:52 AM | ADDED : மார் 29, 2025 01:29 AM
போபால்: மத்திய பிரதேசத்தில், வேலையில்லாத இளைஞர்களை குறிப்பிடும் போது, லட்சிய இளைஞர்கள் என்று குறிப்பிடும்படி மாநில அரசு தெரிவித்து இருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.மத்திய பிரதேசத்தில், வேலையில்லா திண்டாட்டம் நீண்ட நாள் பிரச்னையாக உள்ளது. அதிகாரப்பூர்வ அரசு ஆவணப்படி ம.பி.,யில், 2023, ஜூலை நிலவரப்படி, 25.82 லட்சம் பேர் வேலையில்லாமல் இருந்தனர். அதே ஆண்டு டிசம்பரில் இந்த எண்ணிக்கை, 26.17 லட்சமாக உயர்ந்துள்ளது.அது தற்போது, 29.36 லட்சத்தை எட்டிவிட்டதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. ஆனால் ம.பி.,யில் இளைஞர்கள் வேலையின்றி தவிப்பதை, மாநில அரசு ஒப்புக்கொள்ள தயாராக இல்லை.இதற்கிடையே, சாலைகள், மாவட்டங்களின் பெயர்களை மாற்றுவது போல, வேலையில்லா இளைஞர்களை அழைக்கும் விதத்தையும் மாநில அரசு மாற்றியுள்ளது.வேலையில்லா இளைஞர்கள் என்று கூறாமல், லட்சிய இளைஞர்கள் என கூற வேண்டும் என, மாநில அரசு தெரிவித்துள்ளது.இதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இது குறித்து காங்., - எம்.எல்.ஏ., பிரதாப் கிரேவல் கூறியதாவது:இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியாத அரசு, தங்கள் கையாலாகாதனத்தை மூடி மறைப்பதற்காக, இந்த பெயர் மாற்ற நாடகத்தை போடுகிறது. மாநிலத்தில் வேலையின்றி தவிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையை கூட இப்போது வெளியிட மறுக்கிறது. பிரச்னையை தீர்ப்பதை விட்டுவிட்டு, பெயர் மாற்றம் செய்தால் தீர்வு கிடைத்துவிடுமா? இவ்வாறு அவர் கூறினார்.