உன்னாவ் பாலியல் வழக்கு: மாஜி எம்.எல்.ஏ.,வுக்கு மீண்டும் சிறை
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., குல்தீப் செங்காரின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமின் வழங்கிய டில்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் குல்தீப் செங்கார். கடந்த 2017ல் அவரது வீட்டிற்கு வேலை தேடிச்சென்ற 17 வயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், செங்காருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்ததுடன் நிபந்தனை ஜாமின் வழங்கி சமீபத்தில் உத்தரவிட்டது. இது, நாடு முழுதும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில், டில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சி.பி.ஐ., தரப்பிலும் பாதிக்கப்பட்ட பெண் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் மகேஸ்வரி, அகஸ்டின் ஜார்ஜ் மசி அடங்கிய விடுமுறை கால அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. டில்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக நான்கு வாரங்களில் சி.பி.ஐ., பதில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற அமர்வு, குல்தீப் செங்காரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. - டில்லி சிறப்பு நிருபர் -