|  ADDED : அக் 31, 2025 07:17 AM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
புதுடில்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 2,790 இந்தியர்கள் அங்கிருந்து திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து, சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கண்டறிந்து, அவர்களை நாடு கடத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த இந்தியர்கள், மீண்டும் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதுவரையில் 2,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து இதுவரை 2,790 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது; கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் 2,790 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் தங்குவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை பூர்த்தி செய்யாததால், சட்டவிரோத குடியிருப்பாளர்களாகக் கருதி நாடு கடத்தப்பட்டுள்ளனர். அதேபோல, இந்தாண்டில் மட்டும் பிரிட்டனில் இருந்து 100 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர், எனக் கூறினார்.