உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  வாகன உரிமையாளர்களால் மைலேஜ் கணக்கிட முடியாது

 வாகன உரிமையாளர்களால் மைலேஜ் கணக்கிட முடியாது

புதுடில்லி: 'இ - 20' பெட்ரோல் எனப்படும், 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாடு குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், ''ஒரு வாகனத்தின், 'மைலேஜ்' எனப்படும் எரிபொருள் சிக்கனத்தை வாகன உரிமையாளர்களால் துல்லியமாக அளவிட முடியாது. அது, அங்கீகரிக்கப்பட்ட டீலர்களால் மட்டுமே முடியும்,'' என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க, ஏப்., 1 முதல், நாடு முழுதும், 'இ - 20' பெட்ரோல் விற்பனையை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. இதனால், வாகனங்களின் மைலேஜ் குறைவதாக சிலர் புகார் தெரிவிக்கின்றனர். இதை ஒப்புக்கொண்ட மத்திய அரசு, 'இ - 20' பெட்ரோல் பயன்பாட்டால், சில வாகனங்களில், 3 - 5 சதவீதம் வரை மட்டுமே மைலேஜ் குறையும் என, தெரிவித்தது. இந்நிலையில், தனியார் ஆங்கில செய்தி நிறுவனம் சார்பில் டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சருமான நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போது அவரிடம், 'என் கார், 2023ல் வாங்கப்பட்டது. இது, 'இ - 20' பெட்ரோலுக்கு ஏற்றது. 'இ - 20' பெட்ரோலை பயன்படுத்திய பின், காரின் மைலேஜ் குறைந்து விட்டது. லிட்டருக்கு, 11 கிலோமீட்டரில் இருந்து, 7 கிலோமீட்டராக மைலேஜ் குறைந்து விட்டது' என, பெண் பத்திரிகையாளர் ஒருவர் கூறினார். ''இந்த அளவீடு எப்படி கணக்கிடப்பட்டது?'' என, அமைச்சர் நிதின் கட்கரி கேட்க, 'எல்லாரும் செய்வது போல, காரின் டேஷ்போர்டில் உள்ள டிஜிட்டல் திரையில் காட்டும் அளவீட்டை வைத்து சரிபார்த்தேன்' என, அந்த பத்திரிகையாளர் கூறினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் நிதின் கட்கரி, ''உங்களாலோ அல்லது என்னாலோ வாகனத்தின் மைலேஜை சரியாக கணக்கிட முடியாது. ஒரு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட டீலர் மையத்தில் உள்ள இயந்திரத்தை வைத்து மட்டுமே வாகனத்தின் மைலேஜை துல்லியமாக சரிபார்க்க முடியும்,'' என்றார்.

வழக்குப்பதிவு

எத்தனால் எரிபொருள் விவகாரம் தொடர்பாக, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி குறித்து சமூக வலைதளங்களில் தவறான மற்றும் அவதூறான பதிவுகளை பதிவிட்டோர் மீது நாக்பூர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

HKTamizhlover
ஜூலை 17, 2026 10:43

இவர் கூறுவது மாண்புமிகு நகைப்புக்ககுறியது ஒருவர் தினமும் உபயோகிக்கும் அளவை அவர் இப்போது செய்யும் எரிபொருள் செலவில். அதற்கு ஏற்றாற்போல் விலையையும் குறைக்க வில்லை கணக்கிடுவது சுலபம்.


Balan Palaniappan
ஜூலை 16, 2026 07:44

மைலேஜ் குறைகிறது என்றாலே அது என்ஜினுக்கு தீமை விளைவிக்கின்றது என்று அர்த்தம். நான் கொண்டு வந்த திட்டத்திற்கு யாரும் குறை சொல்லக்கூடாது என்று நிதின் கட்கரி சொன்னால் சிரிப்பதை தவிர வேறொன்றும் செய்யத் தெரியவில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை