தொழிலதிபர் குத்திக்கொலை: பேரன் கைது
ஹைதராபாத்; தெலுங்கானாவின் ஹைதராபாதை தலைமையிடமாக வைத்து செயல்படும் வேல்ஜன் குழுமம், கப்பல் கட்டுதல், ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளுக்கான பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இதன் தலைமை இயக்குநராக வி.சி.ஜனார்தன ராவ், 86, இருந்தார். இவர் ஹைதராபாதில் உள்ள சோமாஜிகுடா பகுதியில் வசித்து வந்தார். ஜனார்தன ராவ், தன் மூத்த மகள் வழி பேரனான ஸ்ரீ கிருஷ்ணா என்பவரை வேல்ஜன் குழுமத்தின் தலைவராக நியமித்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில், கடந்த 6ம் தேதி இவரது வீட்டுக்கு, மற்றொரு மகளான சரோஜினி தேவி மற்றும் அவரது மகன் கீர்த்தி தேஜா, 28, ஆகியோர் சென்றனர். அப்போது சொத்து தகராறில் ஜனார்த்தன ராவுக்கும், பேரன் கீர்த்திக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கீர்த்தி 70 முறை கத்தியால் குத்தியதில், ஜனார்த்தன ராவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தப்பிச் சென்ற கீர்த்தியை போலீசார் நேற்று கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், சொத்து தராத ஆத்திரத்திலேயே கீர்த்தி இந்த கொலையை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.