UPDATED : செப் 24, 2024 07:56 AM | ADDED : செப் 24, 2024 02:17 AM
பெங்களூரு : 'முடா' முறைகேடு வழக்கில், தன் மீது விசாரணை நடத்த கவர்னர் அளித்த அனுமதிக்கு தடை கோரி, முதல்வர் சித்தராமையா, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு மீது இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.கர்நாடகா மாநிலம் மைசூரில் முடா என்றழைக்கப்படும் நகர வளர்ச்சி ஆணையம், மாற்று நிலம் ஒதுக்குவதில் நடைபெற்ற மெகா ஊழல் விவகாரத்தில் கர்நாடகா காங்., முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மாற்று நிலம் ஒதுக்கியதில், ரூ. 3,800 கோடி ஊழல் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. மூடா முறைகேடு விவகாரம் மாநிலம் முழுதும் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் மேலிட அழைப்பின்படி புதுடில்லி சென்ற முதல்வர் சித்தராமையா, தனக்கும், மூடா முறைகேடுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார்.'மூடா' முறைகேடு குறித்து, முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், ஆக., 17ம் தேதி அனுமதி அளித்தார். இந்த அனுமதியை ரத்து செய்ய உத்தரவிடும்படி வலியுறுத்தி, முதல்வர் தரப்பில், ஆக., 19ம் தேதி உயர் நீதிமன்றத்தில் 'ரிட்' மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீது, அனைத்து தரப்பு வாதங்களும், கடந்த 12ம் தேதியுடன் நிறைவு பெற்றது.வழக்கை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார். இந்நிலையில் இந்த வழக்கில்இன்று (செப்.24)தீர்ப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தீர்ப்பை அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். தீர்ப்பு வெளியானால், கர்நாடகாவில் அரசியல் பரபரப்பு ஏற்படுவது உறுதி.