உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விஜயவாடா - ஸ்ரீசைலம் கடல் விமான சேவை சுற்றுலா துறையை மேம்படுத்துகிறது ஆந்திரா

விஜயவாடா - ஸ்ரீசைலம் கடல் விமான சேவை சுற்றுலா துறையை மேம்படுத்துகிறது ஆந்திரா

விஜயவாடா: ஆந்திராவில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், விஜயவாடா - ஸ்ரீசைலம் இடையே கடல் விமான சேவை துவங்கப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம், வரும் 9 அல்லது 15ல் நடத்தப்பட உள்ளது.ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

பல்வேறு நடவடிக்கை

இங்கு சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், சுற்றுலா பயணியரை கவரவும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, விஜயவாடா - ஸ்ரீசைலம் இடையே கடல் விமான சேவையை துவங்க, ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சோதனை ஓட்டத்தை, வரும் 9 அல்லது 15ல், முதல்வர் சந்திரபாபு நாயுடு துவக்கி வைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.கடல் விமான சேவையை ஆந்திர பிரதேச விமான நிலைய மேம்பாட்டுக் கழகம் நிர்வகிக்கிறது. 10 இருக்கைகள் கொண்ட கடல் விமானம், விஜயவாடாவின் பிரகாசம் தடுப்பணையில் துவங்கி, நந்தியால் மாவட்டத்தின் ஸ்ரீசைலத்தில் முடிவடைகிறது. இதற்காக பிரத்யேக வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் செல்லும் பயணியர், கிருஷ்ணா நதியின் மேல் பறந்து, ஸ்ரீசைலத்தில் பாதாளகங்கா அருகே தரையிறங்குவர்.

இது குறித்து, ஆந்திர அரசு அதிகாரிகள் கூறியதாவது:

பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியருக்கு, கடல் விமான சேவை நிச்சயம் பிடிக்கும். ஸ்ரீசைலம் பகுதியில் நிறைய கோவில்கள் உள்ளன. தெலுங்கானாவில் இருந்து ஸ்ரீசைலத்துக்கு வரும் பக்தர்கள், சாலை மார்க்கமாக வர ஏழு மணி நேரமாகிறது.

ஆர்வம்

கடல் விமான சேவையால், இது 40 நிமிடங்களாக குறையும். பக்தர்கள் கோவிலுக்குச் செல்வது எளிதாவது மட்டுமின்றி, நல்லமல்லா காடுகளின் அழகையும், அமைதியான நதி நிலப்பரப்புகளையும் காற்றில் இருந்து பார்க்க, சுற்றுலாப் பயணியருக்கு இது ஒரு தேர்வாக இருக்கும். கடல் விமான சேவையின் சோதனை ஓட்டத்தை நடத்த, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. விரைவில் சோதனை ஓட்டம் நடக்கும். இந்த சேவையை விரிவுபடுத்துவதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆர்வமாக உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ