ஷிகாவியில் நாளை விஜயேந்திரா பிரசாரம்
ஷிவமொக்கா; ஷிகாவி இடைத்தேர்தல் பிரசாரம், சூடு பிடித்துள்ளது. பா.ஜ., வேட்பாளர் பரத் பொம்மைக்கு ஆதரவாக, மாநில தலைவர் விஜயேந்திரா நாளை பிரசாரம் செய்யவுள்ளார்.ஹாவேரி, ஷிகாவி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த பசவராஜ் பொம்மை, லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.,யானார். இவரால் காலியான ஷிகாவி தொகுதிக்கு, இம்மாதம் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. அவரது மகன் பரத்துக்கு சீட் கிடைத்துள்ளது.ஏற்கனவே எம்.பி., பசவராஜ் பொம்மை உட்பட, பல தலைவர்கள் பிரசாரம் செய்தனர். தீபாவளியை முன்னிட்டு, பிரசாரம் நிறுத்தப்பட்டது. இன்று முதல் பிரசாரம் சூடு பிடிக்கும். மத்திய தலைவர்கள், ஸ்டார் பிரசாரகர்கள் பிரசாரத்தில் இறங்குவர். மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, வேட்பாளர் பரத் பொம்மைக்கு ஆதரவாக, நாளை பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.வரும் 11ம் தேதி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அன்றைய தினம் ஷிகாவியின் பல்வேறு இடங்களில் ரோடு ஷோ, பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.ஷிகாவி தொகுதியில் மொத்தம் 2,26,226 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு பஞ்சமசாலி சமுதாயத்தினர் எண்ணிக்கை அதிகம். பஞ்சமசாலி சமுதாயத்தினர் 70,000, முஸ்லிம் வாக்காளர்கள் 55,000 உள்ளனர். இதே காரணத்தால், பஞ்சமசாலி சமுதாயத்தின் பசவராஜ் பொம்மை தொடர்ந்து வெற்றி பெறுகிறார். இடைத்தேர்தலில் அவரது மகனுக்கு சீட் கொடுத்துள்ளனர்.அதே நேரம், முஸ்லிம் ஓட்டுகளை குறிவைத்து யாசின் கான் பனாட்டை, காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கியுள்ளது.