எர்ணாகுளம் கோர்ட்டில் வக்கீல்கள், மாணவர் அமைப்பினர் திடீர் மோதல்!
கொச்சி; எர்ணாகுளம் நீதிமன்ற வளாகத்தில் இந்திய மாணவர் கூட்டமைப்பு, வக்கீல்கள் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் நிலவியது.எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட வக்கீல்கள் சங்க ஆண்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ள ஏராளமான வக்கீல்கள் அங்கே குழுமி இருந்தனர்.அப்போது அங்கு இந்திய மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர், அத்துமீறி நுழைந்தனர். அவர்கள், அங்கே நடைபெறும் நிகழ்வை சீர்குலைத்தனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் மூண்டது.இதில், மாணவர் அமைப்பைச் சேர்ந்த 16 பேரும், வக்கீல்கள் 8 பேரும் காயம் அடைந்தனர். இதையடுத்து, நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் வரவழைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து அங்குள்ளோரிடம் விசாரணை நடத்திய போலீசார், தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இந்த மோதல் சம்பவம் குறித்து இருதரப்பினரும் மாறி, மாறி குற்றம்சாட்டி உள்ளனர். மகாராஜா கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் இங்கே வந்து பிரச்னை செய்ததாக வக்கீல்களும், தவறாக நடந்து கொண்டதால் மோதல் மூண்டதாக மாணவர் அமைப்பினரும் கூறி உள்ளனர்.