உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அனைத்து கட்சி கூட்டத்தில் ஒற்றுமை குரல்: பயங்கரவாதத்தை ஒடுக்க சூளுரை

அனைத்து கட்சி கூட்டத்தில் ஒற்றுமை குரல்: பயங்கரவாதத்தை ஒடுக்க சூளுரை

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக டில்லியில் நேற்று நடந்த அனைத்து கட்சிக்கூட்டத்தில், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் மத்திய அரசுடன் ஒன்றிணைந்து செயல்பட அனைத்துக் கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டுவது வழக்கம். அதன்படி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம் டில்லியில் நேற்று கூடியது.இதில், அரசு தரப்பில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், தேசியவாத காங்.,கின் பிரபுல் படேல், ஏ.ஐ.எம்.ஐ.எம்., அசாதுதீன் ஓவைசி, தி.மு.க., சிவா உட்பட ஏராளமான கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.தாக்குதலில் உயிரிழந்தோருக்கு மவுன அஞ்சலியுடன் கூட்டம் துவங்கியது. கூட்டத்துக்கு பின் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:நம் நாட்டில் நடந்த பயங்கரவாத செயல்களை பிரதமர் மோடியும், மத்திய அரசும் துளியும் சகித்துக் கொள்ளாது என்பதை அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தெளிவுபடுத்தினோம்.பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அரசுடன் துணை நிற்கவும், எதிர்காலத்தில் அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு தருவதாக அனைத்துக் கட்சி தலைவர்களும் உறுதி அளித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்கான தீர்க்கமான முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும் என அனைத்துக் கட்சி தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தனர். காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறுகையில், ''பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் முழு ஒத்துழைப்பு அளிக்கும்,'' என்றார்.தி.மு.க., - எம்.பி., சிவா கூறியதாவது: பயங்கரவாத நடவடிக்கைகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்விஷயத்தில் மத்திய அரசு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அதற்கு தமிழகம் துணை நிற்கும்.அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்போம். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்றில்லாமல் எல்லாரும் ஒன்று பட்டு நிற்கிறோம். இந்த விவகாரத்தில் எந்த பாகுபாடும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். - நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Jayaraman Pichumani
ஏப் 25, 2025 05:37

ஒற்றுமையாகக் குரல் கொடுத்தவர்கள் மனசு மாறுவதற்குள் கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.