மைசூரு: ''கடந்த சட்டசபை தேர்தல் போன்று, 80 வயது கடந்த முதியோர், 40 சதவீதத்துக்கும் அதிகமான பாதிப்புடைய மாற்றுத்திறனாளிகள், வீட்டில் இருந்தே ஓட்டு போட வசதி செய்யப்பட்டுள்ளது,'' என, மைசூரு மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.லோக்சபா தேர்தல் தொடர்பாக, அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், மைசூரில், கலெக்டர் ராஜேந்திரா நேற்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, தேர்தல் நடத்தை விதிகள் கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்படும். அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு தர வேண்டும்.ஓட்டுச்சாவடிகள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை உறுதி செய்து கொள்ளும் வி.வி., பேட் இயந்திரங்கள், வாக்காளர் பட்டியல் தயார் நிலையில் உள்ளன.தேவையான ஊழியர்களும், அதிகாரிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே லோக்சபா தேர்தலுக்கு, அனைத்து வகையிலும் மைசூரு மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது.தேர்தல் தேதி அறிவித்த பின், புதிதாக எந்த திட்டங்களும் அறிவிக்கப்படுவதோ, அமல்படுத்துவதோ தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயலாகும். ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட பணிகள் தொடர்ந்து நடத்த தடையில்லை.அரசியல் கட்சியினர், பிளக்ஸ் பேனர்கள், கட் அவுட்கள் பொருத்துவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முன் அனுமதி பெறுவது கட்டாயம். இதுபோன்று அனுமதி கடிதங்களை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீராக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.விதிமுறை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருந்தால், பூத் முகவரை நியமித்து பரிசீலனை செய்து கொள்ளுங்கள். ஓட்டு போடுவதற்கு 10 நாட்கள் முன்பு வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவோ, திருத்தம் செய்யவோ, நீக்கவோ வாய்ப்பு உள்ளது.கடந்த சட்டசபை தேர்தல் போன்று, 80 வயது கடந்த முதியோர், 40 சதவீதத்துக்கும் அதிகமான பாதிப்புடைய மாற்றுத்திறனாளிகள், வீட்டில் இருந்தே ஓட்டு போட வசதி செய்யப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டுப்பதிவு செய்வேன் என்று விரும்பினால், அப்படியும் செய்யலாம்.மைசூரு மாவட்டத்தில், தற்போது ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை 2,915 ஆக உயர்ந்துள்ளன. அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், குடிநீர், கழிப்பறை, மின்சாரம், உதவி மையம், கூடாரம் போன்ற வசதிகள் செய்யப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.