உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தர்மஸ்தலா குறித்து அவதுாறு பெங்களூரில் தீட்டப்பட்ட சதி?

தர்மஸ்தலா குறித்து அவதுாறு பெங்களூரில் தீட்டப்பட்ட சதி?

பெங்களூரு: தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவில் பற்றி அவதுாறு பரப்ப, பெங்களூரில் உள்ள லாட்ஜில் சதி திட்டம் தீட்டப்பட்டது தெரியவந்துள்ளது. கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, 100க்கும் மேற்பட்ட பெண்கள் உடல்களை புதைத்ததாக பொய் புகார் அளித்த மாண்டியா, சிக்கப்பள்ளியின் சின்னையா என்பவரை, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தன்னை பின்னால் இருந்து இயக்கியது ராஷ்ட்ரீய ஹிந்து ஜாகரன வேதிகே அமைப்பு தலைவர் மகேஷ் திம்மரோடி, அவரது ஆதரவாளர் கிரிஷ் மட்டன்னவர், சமூக ஆர்வலர் ஜெயந்த் என தெரிவித்தார். மகேஷ் திம்மரோடி வீட்டில் சோதனை நடத்திய எஸ்.ஐ.டி., அதிகாரிகள், சின்னையாவுக்கு சொந்தமான இரண்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவில், கோவிலின் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டே குடும்பத்தினர் பற்றி அவதுாறு பரப்ப, பெங்களூரில் சதி திட்டம் தீட்டியதாக, எஸ்.ஐ.டி.,க்கு தெரியவந்தது. வித்யாரண்யபுரா திண்ட்லு சதுக்கத்தில் உள்ள லாட்ஜ் ஒன்றில், சின்னையா ஐந்து மாதங்கள் தங்கி இருந்ததும், அந்த லாட்ஜில் சின்னையாவை, மகேஷ் திம்மரோடி, கிரிஷ் மட்டன்னவர், ஜெயந்த், சுஜாதா பட் ஆகியோர் அடிக்கடி சந்தித்ததும் தெரிந்தது. நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு லாட்ஜிற்கு சின்னையாவை, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் அழைத்து சென்று விசாரித்தனர். அவர் தங்கி இருந்த அறையில் சோதனை நடத்தப்பட்டது. லாட்ஜ் லெட்ஜர் புக், கண்காணிப்பு கேமரா டி.வி.ஆர்., உள்ளிட்டவற்றை ஆதாரங்களாக சேகரித்து கொண்டனர். பின், அவரை மீண்டும் தர்மஸ்தலாவுக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில், பா.ஜ., முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யா கூறுகையில், ''தமிழக காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்திலை கைது செய்தால், தர்மஸ்தலா வழக்கின் உண்மை தெரிந்து விடும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை