உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பரம எதிரியாக இருந்தாலும் மெஹபூபா முப்தியுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம்: பரூக் அப்துல்லா.

பரம எதிரியாக இருந்தாலும் மெஹபூபா முப்தியுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம்: பரூக் அப்துல்லா.

புதுடில்லி, அக். 8- ஹரியானா, ஜம்மு - காஷ்மீரில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளில் ஜம்மு - காஷ்மீரில் தொங்கு சட்டசபை அமையும் என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில், பரம எதிரியான மெஹபூபா முப்தியுடன் கைகோர்க்க தயாராக உள்ளதாக, முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ஐந்து நியமன உறுப்பினர்கள் திட்டத்துடன் கவர்னரும் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.ஹரியானா மற்றும் ஜம்மு - காஷ்மீர் சட்ட சபைகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. இதற்கான விரிவான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்துள்ளது. ஹரியானாவில் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு கட்டமாகவும், ஜம்மு - காஷ்மீரில் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாகவும் தேர்தல் நடந்தன.ஹரியானாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் முயற்சியில் பா.ஜ., தீவிர பிரசாரம் செய்தது. ஆனால் உள்கட்சி பிரச்னை, மக்களிடம் உள்ள அரசுக்கு எதிரான மனநிலை போன்றவை அதற்கு எதிராக இருந்தன. இந்த தேர்தலில் காங்., அமோக வெற்றி பெறும் என, பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன. இதனால், காங்கிரஸ் தெம்புடன் உள்ளது.அதே நேரத்தில் தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள், 'ஜம்மு - காஷ்மீரில், காங்கிரஸ் மற்றும் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும். 'ஆனால், பெரும்பான்மை கிடைக்காது. தனித்து போட்டியிட்ட பா.ஜ.,வும் அதற்கு நெருக்கமாக வரும்' என, தெரிவித்திருந்தன. தேசிய அளவில், 'இண்டி' கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சிகளுடன் இடம்பெற்றுள்ள முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி, சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டது. தொங்கு சட்டசபை அமையும் பட்சத்தில், மக்கள் பரம எதிரியுடன்!ஜனநாயக கட்சி, மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மக்கள் ஜனநாயக கட்சியுடன், தேசிய மாநாட்டு கட்சி பேச்சு நடத்தியது. 'நாமெல்லாம், இண்டி கூட்டணியில் ஒன்றாக இருக்கிறோம். இங்கும் ஒன்றாக இருப்போம்' என, துாது விடப்பட்டது.சட்டசபைக்கு, 10 ஆண்டுக்குப் பின் தேர்தல் நடப்பதால், இந்த தேர்தல் முடிவுகள், ஜம்மு - காஷ்மீருக்கு மிகவும் முக்கியமானதாகும். அதனால், 'மக்களின் நலன் கருதி, காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சிக்கு ஆதரவளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்' என, மெஹபூபா முப்தி கூறியிருந்தார்.இதை தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா வரவேற்றுள்ளார். பரம எதிரியாக இருந்தாலும், மக்களின் நலனுக்காக மெஹபூபா முப்தியுடன் கைகோர்க்க தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.இதற்கிடையே, ஐந்து நியமன எம்.எல்.ஏ.,க்களை துணை நிலை கவர்னர் உடனடியாக நியமிப்பார். அவர்கள், புதிய ஆட்சி அமைவதில் முக்கிய பங்காற்றுவர் என்றும் பேசப்படுகிறது. இதனால் ஓட்டு எண்ணிக்கைக்குப் பின், ஜம்மு - காஷ்மீரில் பெரும் அரசியல் காட்சிகள் அரங்கேறும் என்று எதிர்பார்க்கலாம்.இதில் என்ன தவறு?பரம எதிரியாக இருந்தாலும், காஷ்மீரில் ஆட்சி அமைக்க மெஹபூபா முப்தியுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம். இதில் என்ன இருக்கிறது. ஏன் நாங்கள் சேரக் கூடாது? ஜம்மு - காஷ்மீரின் நலனுக்காக இணைவதில் என்ன தவறு உள்ளது. தேர்தலில் நாங்கள் எதிர்த்து போட்டியிட்டிருக்கலாம். ஆனால், ஆட்சி அமைக்க அவர்களுடைய ஆதரவை பெறுவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. காங்கிரசுக்கும் இருக்காது.-பரூக் அப்துல்லாதலைவர், தேசிய மாநாட்டு கட்சி

ஐந்து பேர் ஆதரவு முக்கியமானது

ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து, 2019ல் விலக்கி கொள்ளப்பட்டது. அப்போது, ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. ஜம்மு - காஷ்மீர் சட்டசபையுடன் கூடியதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.ஜம்மு -  காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறையில், 90 சட்டசபை தொகுதிகள் உருவாக்கப்பட்டன. இந்த சட்டத்துக்கு முன், சட்டசபையில், இரண்டு பெண் நியமன உறுப்பினர்கள் இருந்தனர்.மறுசீரமைப்பு சட்டத்தில் இரண்டு பெண்கள், இரண்டு காஷ்மீரி பண்டிட்கள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வந்தவர்களுக்கு ஒன்று என, ஐந்து நியமன எம்.எல்.ஏ.,க்கள் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் துணை நிலை கவர்னரால் நியமிக்கப்படுவர்.இதையடுத்து, சட்டசபையின் மொத்த பலம், 95 ஆக இருக்கும். பெரும்பான்மைக்கு, 48 இடங்களும் தேவை. இந்த ஐந்து நியமன உறுப்பினர்களும் உடனடியாக நியமிக்கப்படுவர். அவர்கள், பா.ஜ.,வைச் சேர்ந்தவர்களாக இருப்பர் என, அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் சோபி யூசுப் கூறியுள்ளார். தொங்கு சட்டசபை அமைந்தால், இந்த ஐந்து பேரின் ஆதரவு முக்கிய பங்காற்றும் என, பா.ஜ., நினைக்கிறது. மெஹபூபா முப்தியுடன் தேசிய மாநாட்டு கட்சி பேசி வரும் நிலையில், சுயேச்சைகள் மற்றும் பிற கட்சி எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை பெறுவதற்கு, பா.ஜ., தற்போதே தயாராகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Rpalnivelu
நவ 04, 2024 17:39

திருட்டு த்ரவிஷ பங்காளிகள் போலவே அவங்களும் திருட்டு கூட்டு களவாணிகள் தான். சந்தேகம் வாணா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை