உங்களை மரியாதையுடன் நடத்துவோம் ; ம.ஜ.த.,வினருக்கு சிவகுமார் அழைப்பு
ராம்நகர்; ''ம.ஜ.த., தொண்டர்கள் உங்கள் நேரத்தை வீணாக்காமல், காங்கிரசில் வந்து இணைந்து கொள்ளுங்கள். உங்களை நாங்கள் மரியாதையுடன் நடத்துவோம்,'' என்று துணை முதல்வர் சிவகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.ராம்நகர், சென்னப்பட்டணாவில் துணை முதல்வர் சிவகுமார் அளித்த பேட்டி:கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலை விட லோக்சபா தேர்தலில், சென்னப்பட்டணா தொகுதியில் காங்கிரசுக்கு 80,000 ஓட்டுகள் கூடுதலாக கிடைத்துள்ளன. தொகுதியின் வளர்ச்சிக்கு அரசு நிறைய நிதி ஒதுக்கி உள்ளது. இதனால், சென்னப்பட்டணா மக்களுக்கு எங்கள் கட்சி மீது நம்பிக்கை வந்துள்ளது. பா.ஜ., -- ம.ஜ.த., கூட்டணிக்கு எதிர்காலம் இல்லை. அந்த கூட்டணி ஆட்சிக்கும் வராது. இதனால், ம.ஜ.த., தொண்டர்கள் உங்கள் நேரத்தை வீணாக்காமல், காங்கிரசில் வந்து இணைந்து கொள்ளுங்கள். உங்களை நாங்கள் மரியாதையுடன் நடத்துவோம்.ஐந்து வாக்குறுதி திட்டங்களை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை. இந்த திட்டங்கள் இன்னும் எட்டு ஆண்டுகளுக்கு தொடரும். சக்தி திட்டம் தொடர்பாக, நான் கூறிய வார்த்தைகளை திரித்து, அரசுக்கு எதிராக அவதுாறு பரப்ப எதிர்க்கட்சியினர் முயற்சி செய்கின்றனர். சென்னப்பட்டணா கூட்டணி வேட்பாளர், உணர்ச்சி பூர்வமாக பேசி ஓட்டு சேகரிப்பில் ஈடுபடுகிறார். ஆனால் நாங்கள் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்தில் தேர்தலை சந்திக்கிறோம்.இவ்வாறு அவர்கூறினார்.