பெங்களூரு: கர்நாடகா முன்னாள் டி.ஜி.பி., ஓம்பிரகாஷ் கொலை வழக்கில், தன் தாயும், தங்கையும் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, தந்தையை கொலை செய்து விட்டதாக, ஓம்பிரகாஷ் மகன் போலீசில் புகார் அளித்து உள்ளார். அவர்கள் இருவரிடமும் விசாரணை நடக்கிறது. இதற்கிடையே, ஓம்பிரகாைஷ கத்தியால் குத்திக் கொலை செய்வதற்கு முன், அவரது முகத்தில் மிளகாய்த் துாளை துாவியதாக, அவரது மனைவி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்
விசாரணை
கர்நாடக மாநிலம், பெங்களூரு எச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தவர், ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி., ஓம்பிரகாஷ், 68. நேற்று முன்தினம் போலீசாருக்கு போன் செய்த அவரது மனைவி பல்லவி, 64, ஓம்பிரகாஷ் இறந்து விட்டதாகக் கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.போலீசார் அங்கு சென்றபோது, வீட்டில் ரத்த வெள்ளத்தில் ஓம்பிரகாஷ் இறந்து கிடந்தார்.பல்லவியிடம் கேட்டபோது, கணவரை கொன்று விட்டதாகக் கூறினார். உடன், அவரது மகள் கிருத்தி, 30, இருந்தார். இருவரையும் போலீசார் அழைத்துச் சென்று விசாரித்தனர். இரவு, அவர்களை பெண்கள் பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பி வைத்தனர். நேற்று காலை பல்லவி, கிருத்தியை மீண்டும் விசாரணைக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.போலீஸ் நிலையம் சென்றவுடன் கிருத்தி, 'எங்களை ஏன் காவலில் எடுத்தீர்கள்' எனக் கேட்டு, ஜீப்பில் இருந்து இறங்காமல் அடம் பிடித்தார். அப்போது பல்லவி, 'என் மகள் எந்த தவறும் செய்யவில்லை. அவரை விட்டு விடுங்கள்' என்றார்.ஒரு வழியாக, கிருத்தியை போலீசார் சமாதானப்படுத்தி, விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.விசாரணையின் போது பல்லவி கூறியதாவது:கடந்த ஒரு வாரமாக எங்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவதாக ஓம்பிரகாஷ் மிரட்டினார். சம்பவம் நடந்த அன்று காலையில் இருந்து வீட்டில் பல்வேறு விஷயங்களுக்காக சண்டை நடந்தது.மதியம் மீண்டும் சண்டை நடந்தபோது, எங்களை கொல்ல முற்பட்டார். எங்களை தற்காத்துக் கொள்ள போராடினோம். சமையல் அறைக்குச் சென்று மிளகாய்த் துாளை எடுத்து வந்து அவர் முகத்தில் விசினேன். பின், அவரது கை, கால்களை கட்டிப் போட்டு, கத்தியால் மாறி மாறிக் குத்தினேன். அதிகப்படியான ரத்தம் வெளியேறியதால் இறந்துவிட்டார்.இவ்வாறு அவர் கூறினார். மனச்சிதைவு நோய்
இதற்கிடையில், கொலை நடந்த இடத்தில் கிடைத்த கைரேகையை பதிவு செய்த நிபுணர்கள், பல்லவியின் கைரேகையை பதிவு செய்தனர். கிருத்தி, தன் கைரேகையை வழங்க மறுத்தார். இதையடுத்து, அவரை விசாரணை அறைக்கு அழைத்துச் சென்ற போலீசார், வீடியோவில் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.இந்நிலையில், எச்.எஸ்.ஆர்., லே - அவுட் போலீசில், ஓம்பிரகாஷ் மகன் கார்த்திகேஷ் அளித்துள்ள புகார்:என் தாய் பல்லவி கடந்த 12 ஆண்டுகளாக, 'ஸ்கிசோபிரினியா' என்ற மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், கடந்த ஒரு வாரமாக தந்தையை கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்தார்.இதனால் என் தந்தை, அத்தை சரிதா வீட்டுக்குச் சென்று விட்டார். இரண்டு நாட்களுக்கு முன், அத்தை சரிதா வீட்டுக்குச் சென்ற என் தங்கை கிருத்தி, தந்தையை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அழைத்து வந்தார்.நேற்று முன்தினம், தொம்மலுாரில் உள்ள கர்நாடகா கோல்ப் சங்கத்தில் இருந்தேன். அப்போது என் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜெயஸ்ரீ ஸ்ரீதரன், என்னை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, 'உங்கள் தந்தை இறந்து விட்டார்' என்று கூறினார். உடனடியாக, வீட்டுக்குச் சென்றேன். வீட்டின் அருகில் பொதுமக்கள், போலீசார் குவிந்திருந்தனர். வீட்டிற்குள் கிடந்த என் தந்தையின் தலை, உடல் முழுதும் ரத்தமாக இருந்தது.அவரது உடல் அருகில் உடைந்த பாட்டில், கத்தி இருந்தது. என் தாயும், தங்கையும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் என் தந்தையிடம் சண்டையிடுவர். அவர்கள் தான் என்தந்தையை கொன்றிருப்பர் என்று சந்தேகம் உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். கைது
இதையடுத்து, போலீசார் பல்லவியை கைது செய்தனர். நேற்று காலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில் உள்ள எம்.சி.எச்.எஸ்., கிளப்பில் ஓம்பிரகாஷ் உடல் வைக்கப்பட்டிருந்தது. அரசியல் தலைவர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள், போலீசார், பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.அவரது உடலுக்கு துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு போலீஸ் மரியாதை செய்யப்பட்டது. மாலை 3:00 மணியளவில் மின்சார சுடுகாட்டில், உடல் தகனம் செய்யப்பட்டது.மாஜி டி.ஜி.பி., ஓம்பிரகாஷ் உடலுக்கு, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா இறுதி அஞ்சலி செலுத்தினார்.