உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பதி நெரிசலுக்கு காரணம் என்ன? விசாரணையில் பரபரப்பு தகவல்

திருப்பதி நெரிசலுக்கு காரணம் என்ன? விசாரணையில் பரபரப்பு தகவல்

திருப்பதி, திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வாங்க காத்திருந்த மக்கள் திடீரென குவிந்ததால், தமிழகத்தைச் சேர்ந்த பெண் உட்பட ஆறு பேர் பலியாகினர். உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் வெளியேறுவதற்காக கதவை திறந்ததே, இந்த சம்பவத்துக்குக் காரணம் என கூறப்படுகிறது.ஆந்திர மாநிலம் திருமலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வரும் ஏழுமலையான் கோவிலுக்கு வழக்கமாகவே மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும்.இன்று நடக்கும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கோவிலில் உள்ள சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இந்த வாசல் வழியாக, 10 நாட்களுக்கு பக்தர்கள் உள்ளே சென்று தரிசனம் செய்ய முடியும். குவிந்த கூட்டம்வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்க, திருமலை திருப்பதி தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தது. இதன்படி, இன்று துவங்கி முதல் மூன்று நாட்களில் மட்டும், 1.20 லட்சம் பேருக்கு டோக்கன் வழங்க திட்டமிடப்பட்டது.இதற்காக, திருப்பதியில் பல இடங்களில், 94 சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.நேற்று காலை டோக்கன் வழங்கும் பணி துவங்கியது. இதற்காக, நேற்று முன்தினம் காலையில் இருந்தே, பக்தர்கள் அதிகளவில் குவிந்திருந்தனர்.பைராகிபடேடாவில் உள்ள பள்ளி ஒன்றில், டோக்கன் வழங்கும் கவுன்டர் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு, 4,000க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் குவிந்திருந்தனர். இரவில் திடீரென கதவு திறக்கப்பட்டதும், மக்கள் உள்ளே நுழைவதற்கு முயன்றனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, தமிழகத்தின் சேலத்தைச் சேர்ந்த மல்லிகா உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். இதைத்தவிர, 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.தேவஸ்தானம் ஊழியர்கள் மற்றும் போலீசார் கடுமையாக போராடி கூட்டத்தை கட்டுப்படுத்தினர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.பெரிய அளவில் கூட்டத்தை வழக்கமாக சந்திக்கும் தேவஸ்தானத்துக்கு, இந்த திடீர் குழப்ப சூழ்நிலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முதற்கட்ட விசாரணையில், டோக்கன் பெறுவதற்காக காத்திருந்த ஒரு பெண்ணுக்கு, திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் வெளியே செல்ல முயன்றார்.அதற்காக ஊழியர்கள் கதவை திறந்தனர். டோக்கனுக்காக கதவு திறக்கப்படுவதாக நினைத்து, அங்கு காத்திருந்தவர்கள் முன்னேற முயன்றனர். ஒரே நேரத்தில் பலரும் நுழைய முயன்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.'சஸ்பெண்ட்'இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது. முன் அறிவிப்பின்றி கதவை திறந்த டி.எஸ்.பி., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். ஆந்திர முதல்வரும், தெலுங்குதேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு, திருப்பதிக்கு நேற்று காலை சென்று, காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.மேலும், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி ஷியாமளா ராவ் கூறுகையில், ''அனைத்து ஏற்பாடுகளும் சரியாக செய்யப்பட்டிருந்தன. ஒரு டி.எஸ்.பி., எவ்வித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் கதவை திடீரென திறந்ததே இந்த சம்பவங்களுக்கு காரணம். அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்,'' என்றார்.

திகிலில் தப்பியவர்கள்!

கூட்ட நெரிசலில் சிக்கி, உயிர் தப்பியோர், நடந்த சம்பவங்கள் குறித்து கூறியுள்ளதாவது:டோக்கன் பெறுவதற்காக, பள்ளி வளாகத்தில் 5,000க்கும் மேற்பட்டோர் காலை முதலே காத்திருந்தனர். நீண்ட நேரம் காத்திருந்ததால், பெரும்பாலானோர் பொறுமையை இழந்திருந்தனர். கோவில் நிர்வாகத்தின் சார்பில் எந்த அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை; கூட்டத்தை முறைப்படுத்தவும் முயற்சிகள் எடுக்கவில்லை.இந்நிலையில், கதவு திடீரென திறக்கப்பட்டதும், அனைவரும் உள்ளே புகுவதற்கு முயற்சித்துள்ளனர்; ஒருவர் மீது ஒருவர் ஏறிச் சென்றனர். சிறிது நேரத்துக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. பெரும் குழப்பமாக இருந்தது.குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் இருக்கின்றனரே என்று பார்க்காமல், ஆண்கள் பலரும் தள்ளிக் கொண்டே முன்னேறினர். ஒரு ஐந்து நிமிடங்களில், நாம் அனைவரும் இறந்து விடுவோம் என்றே நினைத்தோம். போலீசார் கூட்டத்தை முறைப்படுத்தி நிற்க வைத்திருந்தால், இந்த சம்பவமே ஏற்பட்டிருக்காது. கதவை திடீரென திறந்ததே பிரச்னைக்கு முக்கிய காரணம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Krishnamurthy Venkatesan
ஜன 10, 2025 12:46

வெளிநாடுகளில் பேருந்திற்கு கூட மக்கள் வரிசையாக செல்வதை பார்த்து பாராட்டும் நாம் இங்கு அந்த discipline ஐ பின்பற்றுவதில்லை. self discipline இல்லாததால் இத்தகைய சம்பவங்கள் நடை பெறுகின்றன.


Subramanian
ஜன 10, 2025 06:39

We are also indisciplined. In Mumbai even two persons are there, they will stand in the Q and go. Here, they want everything to be told and forced.


Mani . V
ஜன 10, 2025 05:25

அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது மாதிரி இங்கு நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.


Raj
ஜன 10, 2025 05:23

கூட்ட நெரிசலை சமாளிக்க தெரியாத திருப்பதி தேவஸ்தானம். நிர்வாக சீர்கேடு. இதற்கு முன் லட்டு பிரச்சனை, இப்போ மரண பிரச்சனை... வியாபார ஸ்தலமாக மாறிவிட்டது. உலகத்திலே பணக்கார ஆலயம் 25 லட்சம் போதாது. ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கொடுக்கவேண்டும்.


visu
ஜன 13, 2025 09:57

அவங்க பணக்காரரா இருந்தா என்ன சுரண்டி பிழைக்கும் எண்ணத்தை விட்டு நியாயமான நட்டஈடு மட்டுமே கேட்கவேண்டும்


முக்கிய வீடியோ