உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தர்ஷன், பவித்ரா ஜாமினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் எப்போது?

தர்ஷன், பவித்ரா ஜாமினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் எப்போது?

பெங்களூரு: சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நடிகர் தர்ஷன் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட ஜாமினை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் போலீசார் இன்று அல்லது நாளை மனு தாக்கல் செய்ய உள்ளனர்.சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் நடிகர் தர்ஷன், தனக்கு முதுகுவலி பிரச்னை இருப்பதாக கூறி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.குற்றம் சாட்டப்பட்ட பலரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா, நாகராஜு, அனுகுமார், லட்சுமண், ஜெகதீஷ், பிரசூத் ராவ் ஆகியோருக்கு, ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.அத்துடன், மைசூரு பண்ணை வீட்டில் தங்க அனுமதி கேட்டு தாக்கல் செய்த தர்ஷனின் மனுவையும் ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அதற்கான அனுமதியும் அளித்தது. தற்போது மைசூரில் உள்ள பண்ணை வீட்டில், தர்ஷன் ஓய்வெடுத்து வருகிறார்.இவர்களது ஜாமினை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, உள்துறை அமைச்சகத்திடம், கடிதம் மூலம் மாநில போலீசார் அனுமதி கோரி இருந்தனர். சட்ட வல்லுனர்களின் ஆலோசனைக்கு பின், மேல்முறையீடு செய்ய, உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.இதையடுத்து இன்று அல்லது நாளை உச்சநீதிமன்றத்தில், போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர். ஜாமினை ரத்து செய்ய கோரி, அரசு அனுமதி அளித்துள்ளதால், ஜாமினில் உள்ளோர் பீதியில் உள்ளனர். இவ்வழக்கில் இதுவரை 12 பேர் ஜாமின் பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !