அரசியல் பரபரப்பு மிகுந்த ஷிவமொகா தொகுதியில், வெற்றி குறித்து காங்., - பா.ஜ., கட்சி தொண்டர்கள் பந்தயம் கட்டி வருகின்றனர்.இம்முறை லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில் பல சிறப்பு அம்சங்கள் இருந்தன. 2019 லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசு இருந்தது. அந்த தேர்தலில் இரண்டு கட்சிகள் சேர்ந்து, தேர்தலை எதிர்கொண்டன. ஆனால் இரண்டு கட்சிகளும், தலா ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.* காங்கிரஸ் அரசுஇம்முறை லோக்சபா தேர்தலின்போது, கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு உள்ளது. பா.ஜ., - ம.ஜ.த., கைகோர்த்து, தேர்தலை சந்தித்தன. குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் வெற்றி பெற, காங்கிரசும், கூட்டணி கட்சிகளும் இலக்கு நிர்ணயித்தன. ஒவ்வொரு தொகுதியையும் அலசி ஆராய்ந்து, பல சுற்று கூட்டங்கள் நடத்தி வேட்பாளர்களை களமிறக்கின.பல தொகுதிகள் ஹைவோல்டேஜ் தொகுதிகளாக இருந்தன. ஏப்ரல் 16 மற்றும் மே 7ல் இரண்டு கட்டமாக ஒட்டுப்பதிவு நடந்து வேட்பாளர்களின் எதிர்காலம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது.தற்போது அந்தந்த தொகுதிகளில், வேட்பாளர்களின் வெற்றி, தோல்வி குறித்து சர்ச்சை நடக்கிறது. கிராமங்கள், நகர்ப்புறங்களின் வீடுகள், கடைகள், ஹோட்டல்கள், அலுவலகங்கள் உட்பட, அனைத்து இடங்களிலும் எந்த தொகுதிகளில் எந்த கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார், யார் தோற்பார், யாருக்கு எவ்வளவு ஓட்டுகள் கிடைக்கும் என, விவாதிக்கின்றனர்.* வாக்குவாதம், பந்தயம்இது விஷயமாக, அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் இடையே வாக்குவாதம், அடிதடியும் நடக்கின்றன. தங்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவர் என, நம்பிக்கையில் பந்தயம் கட்டுகின்றனர். நாட்டின் கவனத்தை ஈர்த்த தொகுதிகளில், ஷிவமொகாவும் ஒன்று. இங்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா பா.ஜ., வேட்பாளராகவும்; முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகள் கீதா சிவராஜ்குமார், காங்கிரஸ் வேட்பாளராகவும் களமிறங்கி உள்ளனர்.இதற்கிடையில் பா.ஜ., மீதான அதிருப்தி காரணமாக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, ஷிவமொகா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கினார்.பிரதமர் நரேந்திர மோடி, எடியூரப்பா, மாநில தலைவர் விஜயேந்திரா உட்பட பல முக்கிய தலைவர்கள், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், நடிகர் சிவராஜ்குமார் என, பல தலைவர்கள், அவரவர் கட்சிகளின் வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்தனர்.மூன்று முறை வெற்றி பெற்றுள்ள ராகவேந்திரா, இம்முறையும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையில் உள்ளார். அதே போன்று காங்கிரசாரும், வெற்றி எங்களுடையதே என, சவால் விடுகின்றனர்.சமீபத்தில் கூட ரவீந்திரா என்ற விவசாயி, கீதா சிவராஜ்குமார் தான் வெற்றி பெறுவார் என கூறி, தன் டிராக்டரை பந்தயமாக வைப்பதாக அறிவித்து, பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.*** - நமது நிருபர் -