| ADDED : ஆக 09, 2025 09:28 PM
புதுடில்லி: ஆப்பரேஷன் சிந்தூரில் மத்திய அரசின் தலையீடு இல்லை என்று விமானப்படை தளபதி கூறிய நிலையில், 'பிறகு ஏன் திடீரென போரை நிறுத்த பிரதமர் மோடி உத்தரவிட்டார்?,' என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சியினருக்கு தீராத சந்தேகமும், கேள்விகளும் இருந்து கொண்டே வருகிறது. இது தொடர்பாக பார்லிமென்ட்டில் மத்திய அரசு விளக்கம் கொடுத்த நிலையிலும், காங்கிரஸ் தன் முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. இதனிடையே, ஆப்பரேஷன் சிந்தூரின் போது, போர் விமானிகளுக்கு மத்திய அரசு சுதந்திரம் வழங்கவில்லை என்ற ராகுலின் குற்றச்சாட்டுக்கு, விமானப்படை தளபதி அமர் ப்ரீத் சிங் இன்று விளக்கம் அளித்திருந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான போரில் தங்கள் மீது எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்றும், . போருக்கான விதிகள் குறித்து ஆயுதப்படைகளே முடிவு செய்ததாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில், விமானப்படை தளபதி ஏபி சிங்கின் பேச்சை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில்; விமானப்படைத் தளபதி இன்று வெளியிட்ட புதிய தகவல்களை பார்க்கையில், மே 10ம் தேதி மாலை ஆப்பரேஷன் சிந்தூரை பிரதமர் திடீரென நிறுத்தியது ஏன்...? என்பது மேலும் அதிர்ச்சியளிக்கிறது. பிரதமருக்கு எங்கிருந்து அழுத்தம் வந்தது, அவர் ஏன் இவ்வளவு சீக்கிரம் போரை நிறுத்தினார், எனக் கேட்டுள்ளார்.