புதுடில்லி: வடமாநிலத்தில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம், நேற்று முன்தினம் டில்லி வந்தார். வசந்த் விஹார், பச்சிம் மார்கில் அமைந்துள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் ஸ்ரீ சங்கர வித்யா கேந்த்ராவில் தங்கியுள்ள அவரை, நிடி ஆயோக்கின் தலைமை அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியம், சங்கர வித்யா கேந்த்ராவின் தலைவர் லட்சுமி நாராயணன், செயலர் நடராஜன், பொருளாளர் விஜய மூர்த்தி ஆகியோர் வரவேற்றனர். நுால் வெளியீடு பாரம்பரிய உடை அணிந்த 70க்கும் மேற்பட்ட பெண்கள், அகல் விளக்குகளை கைகளில் ஏந்தி, 'ஸ்ரீ குரோ பாஹிமாம்' எனும் பாடலை பாடி ஸ்ரீ சன்னிதானத்தை வரவேற்றனர். சங்கீத ஆசிரியர் சுவர்ணலதா சுப்ரமணியத்தின் சீடர்கள், தோடகாஷ்டகம் பாடினர். லலித் ஆதித்த கன்னாவரம் எழுதி ஜயஸ்ரீ வெங்கடராமன் வாசித்தளித்த சமஸ்கிருத வரவேற்பு நன்மடலை, வெங்கடராமன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தலைவர் லக் ஷ்மி நாராயணன் அனைவரையும் வரவேற்றார். அச்சமயம் ஸ்ரீ சன்னிதானம் வெளியிட்ட, 'சிருங்கேரியின் மஹிமை' எனும் ஆங்கில நுாலின் ஹிந்தி மொழிபெயர்ப்பின் முதல் பிரதியை காசி மஹாராஜாவும், 'பிரச்னோத்தர ரத்ன மாலிகா' என்ற நுாலின் முதல் பிரதியை, டில்லி ஆர்.கே.புரம் சட்டசபை தொகுதி உறுப்பினர் அனில் ஷர்மாவும் பெற்றுக் கொண்டனர். குழந்தைகளுக்கான வால்மீகி ராமாயணமும் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. மீட்கும் சக்தி பின்னர், ஸ்ரீ சன்னிதானம் வழங்கிய அருளுரை: மனிதர்களை சூழ்ந்திருக்கும் உலகியலான துயரங்களுக்கும், அமைதியின்மைக்கும் ஒரே அருமருந்தாக ஆதிசங்கரர் விளங்கினார். உலகின் எந்த பகுதியிலிருந்தும் துயரத்தில் உள்ளவர் வந்து அவரிடம் சரணடைந்தால், அவரை சம்சார சுழலில் இருந்து மீட்கும் சக்தி அவருக்கு உண்டு. இதனால் தான், அவர் ஜகத்குரு என்று புகழப்படுகிறார். கல்வியும், உலகியலான அறிவும் வரம்புடையவை; ஒருவர் மற்றொருவரை அறிவால் அல்லது திறமையால் வெல்லலாம். ஆனால், அத்வைத உண்மையை அதாவது, ஏகத்துவ உண்மையை உணர்ந்தவர் இதற்கு பின் அறிய வேண்டியது எதுவும் இல்லை எனும் அறுதி நிலையை அடைகிறார். ஆதிசங்கரர் அவதாரத்தின் நோக்கம், அத்வைத தத்துவத்தின் சிறப்பையும், மேன்மையையும் மீண்டும் நிலைநிறுத்துவதாகும். இவ்வாறு அவர் அருளுரை வழங்கினார். இதைத்தொடர்ந்து, ஸ்ரீ சுவாமிகளால் நிகழ்த்தப்படும், ஸ்ரீ சந்திர மவுலீஸ்வரர் பூஜை நடந்தது. பின், டில்லியில் உள்ள பல்வேறு கோவில்களின் பிரசாதங்கள் ஸ்ரீசன்னிதானத்துக்கு வழங்கப்பட்டன. யு டியூப் சேனல் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு சங்கங்கள் சார்பாக, ஸ்ரீ சுவாமிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. வரும் 30ம் தேதி வரை நடைபெறும் விஜய யாத்திரையில், பல்வேறு பொது நிகழ்ச்சிகள், கும்பாபிஷேகம் முதலிய வைபவங்களில் அவர் பங்கேற்க உள்ளார். ஸ்ரீ சன்னிதானத்தின் வடமாநில யாத்திரை நிகழ்ச்சிகளை sringeri.net என்ற யு டியூப் சேனலில் காணலாம்.