உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜானகி பெயரை படத் தலைப்பாக ஏன் வைக்கக் கூடாது? கேரள ஐகோர்ட் கேள்வி

ஜானகி பெயரை படத் தலைப்பாக ஏன் வைக்கக் கூடாது? கேரள ஐகோர்ட் கேள்வி

திருவனந்தபுரம்: 'கடவுளின் பெயர்களில் பல படங்கள் வெளியாகியுள்ள நிலையில், ஜானகி பெயரை பயன்படுத்துவதற்கு மட்டும் தடை விதிப்பது ஏன்?' என, மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு கேரள உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.பிரபல மலையாள நடிகரும், மத்திய இணை அமைச்சருமான சுரேஷ்கோபி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜே.எஸ்.கே., என்ற ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண் அதை சட்டப் போராட்டத்துடன் எதிர்கொள்ளும் சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டு உள்ளது. வழக்கறிஞராக சுரேஷ் கோபியும், படத்தின் முக்கிய நாயகியா அனுபமா பரமேஸ்வரனும் நடித்துள்ளனர். பிரவீன் நாராயணன் இயக்கிய இந்த படம், கேரளாவில், தணிக்கைக்கு அனுப்பப்பட்டு 'யு/ஏ' சான்றிதழும் பெற்றது. இருப்பினும், தலைப்பு தொடர்பாக ஏதேனும் பிரச்னை வரும் எனக் கூறி, இந்த படம் மறு தணிக்கைக்கு மும்பை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, படத் தலைப்பில் ஜானகி இருக்க வேண்டாம் என்றும், அது தொடர்பான காட்சிகளை நீக்க வலியுறுத்தியும் திரைப்பட தயாரிப்பாளருக்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் 'நோட்டீஸ்' அனுப்பியது. இதனால், நேற்று வெளியாகவிருந்த ஜே.எஸ்.கே., படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இந்நிலையில், தணிக்கை வாரியம் நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி உத்தரவில் கூறியதாவது:ஜானகி என அழைக்கப்படும் சீதா பெயரில் பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. சீதா அவுர் கீதா என்ற திரைப்படமும், ராமர் பெயரிலான ராம் - லக்கன் படமும் வெளியாகி, எந்த சர்ச்சையையும் எழுவில்லை. யாரும் எந்த புகாரும் அளிக்கவில்லை. இப்போது மட்டும் பிரச்னை ஏன்? இந்த படத்துக்கு ஜானகியின் பெயரை வைக்கக்கூடாது என புகார் கூறியது யார்? தணிக்கை வாரியத்தின் கேரள கிளை, படத்துக்கு சான்றிதழ் வழங்கிய நிலையில், மும்பை கிளை படத்தை வெளியிட கூடாது என தெரிவிப்பது ஏன்? படத்துக்கு தடை விதிப்பது தொடர்பான அறிவிப்பை உரிய காரணங்களுடன் வரும் 30ம் தேதி தணிக்கை வாரியம் தாக்கல் செய்ய வேண்டும். இது தொடர்பான நோட்டீசுக்கு பதிலளிக்கவோ, மேல் முறையீடு செய்யவோ தயாரிப்பு நிறுவனத்துக்கு முழு சுதந்திரம் உண்டு. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜூன் 28, 2025 12:14

இப்படி ஏதாவது ஏடாகூடமா செய்தாதானே படத்துக்கு இலவசம் விளம்பரம். அதற்காகவே பல பட தயாரிப்பாளர்கள் படத்தின் பெயர், படத்தின் கதை, வசனம், பாடல் வரிகள் எல்லாவற்றிலும் ஏதாவது ஏடாகூடமாக செய்து சீப் விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள்.


Kalyanaraman
ஜூன் 28, 2025 09:20

தொடர்ந்து 11 வருடங்களாக பிஜேபி ஆட்சியில் இருந்தும் தணிக்கை குழு பிஜேபியிடம் இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. தற்போதும் எதிர்க்கட்சிகள் சார்ந்த உறுப்பினர்களே உள்ளார்களோ? இது பிஜேபியின் கையாலாகாத தனத்தைப் தான் காண்பிக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை