பிரியங்க் கார்கே ராஜினாமா செய்வதா? பா.ஜ.,வுக்கு, முதல்வர் சித்தராமையா கேள்வி
பெங்களூரு: ''ஒப்பந்ததாரர் தற்கொலையில் பிரியங்க் கார்கே மீது தவறு இல்லை. அமைச்சர் பதவியை அவர் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்?'' என, பா.ஜ.,வுக்கு, முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பி உள்ளார்.பெங்களூரு விதான்சவுதாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:'ஒப்பந்ததாரர் சச்சின் தற்கொலை வழக்கில், தன் பங்கு எதுவும் இல்லை' என, அமைச்சர் பிரியங்க் கார்கே விளக்கம் அளித்துள்ளார். எத்தகைய விசாரணையையும் எதிர்கொள்ள தயார் என்று கூறி உள்ளார். சச்சின் தற்கொலைக்கு பிரியங்க் கார்கே தான் காரணம் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா? மரண கடிதத்தில் கூட அமைச்சர் பெயர் இல்லை. அவர் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்?அரசியல் வெறுப்பால் பிரியங்க் கார்கே மீது குற்றம் சாட்டப்படுகிறது. வழக்கை சி.ஐ.டி.,யிடம் ஒப்படைத்துள்ளோம். அறிக்கை வந்த பிறகு அடுத்தகட்ட முடிவு எடுப்போம்.பா.ஜ., ஆட்சியில் இருந்தபோது, ஒரு வழக்கை கூட சி.பி.ஐ., விசாரணைக்கு கொடுக்கவில்லை. ஆனால் இப்போது என்ன நடந்தாலும் சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என்று கேட்கின்றனர். இப்படி கேட்க அவர்களுக்கு வெட்கமாக இல்லையா நமது போலீஸ்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.மேல்சபையில் வைத்து அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரை, பா.ஜ., - எம்.எல்.சி., ரவி ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றியும் சி.ஐ.டி., விசாரணைக்கு கொடுத்துள்ளோம். தடய அறிவியல் ஆய்வக அறிக்கை வந்ததும், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு செய்வோம். அமைச்சரவை மாற்றம் குறித்து கட்சி மேலிடம் முடிவு எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.முதல்வருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலுவாதி நாராயணசாமி கூறுகையில், ''சச்சின் எழுதிய மரண கடிதத்தில் மூன்று இடங்களில், அமைச்சர் பிரியங்க் கார்கே பெயர் உள்ளது. இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும்? மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தேசிய தலைவராக இருப்பதால், அவரது மகன் பிரியங்க் கார்கே மீது நடவடிக்கை எடுக்க, முதல்வர் பயப்படுகிறார். ஒருவேளை நடவடிக்கை எடுத்தால், முதல்வர் நாற்காலி பறிபோய் விடுமோ என்ற பயம் அவருக்கு உள்ளது,'' என்றார்.
எதிர்க்கட்சி தலைவர் மீது வழக்கு
பிரியங்க் கார்கே ராஜினாமா செய்ய வலியுறுத்தி, பெங்களூரு ரேஸ்கோர்ஸ் சாலையில் நேற்று முன்தினம் பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலுவாதி நாராயணசாமி, எம்.எல்.சி.,க்கள் ரவி, ரவிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அனுமதியின்றி போராட்டம் நடத்தியதுடன், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சலுவாதி நாராயணசாமி உட்பட 13 பேர் மீது, ஐகிரவுண்ட் போலீஸ் நிலையத்தில், அந்த போலீஸ் நிலைய எஸ்.ஐ., சசிகரண் நேற்று புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவாகி உள்ளது.