கோடிக்கணக்கில் பண மோசடி பெண் கைது; கணவருக்கு வலை
புதுடில்லி:கவர்ச்சிகர முதலீட்டுத் திட்டங்களை அறிவித்து, கோடிக் கணக்கான ரூபாய் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய அவரது கணவரை தேடுகின்றனர்.புதுடில்லி தாப்ரியைச் சேர்ந்த விஜய்ராஜ் என்பவர் 2021ல் கொடுத்த புகாரில், அபிஷேக் அகர்வல் - மீனாட்சி அகர்வால் தம்பதியிடம் 50 லட்சம் ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்து ஏமாந்து விட்டதாக கூறியிருந்தார்.அதேபோல், ராகுல் குப்தா என்பவர் கொடுத்த புகாரில் ரயில்வே பணிகளுக்கு டெண்டர் எடுத்து தருவதாக 3.18 கோடி ரூபாய் வாங்கிய அபிஷேக் - மீனாட்சி தம்பதி ஏமாற்றி விட்டதாக கூறியிருந்தார்.இரு புகார்கள் குறித்தும் வழக்குப் பதிவு செய்த போலீசார், தம்பதியை கைது செய்தனர். ஆனால், ஜாமினில் வந்த இருவரும் தலைமறைவாகினர்.இதையடுத்து, அபிஷேக் - மீனாட்சி தம்பதி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர். மீனாட்சி குறித்து தகவல் தருவோருக்கு 25,000 ரூபாய் பரிசும் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், அண்டை மாநிலமான ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் மீனாட்சி நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார். ஆனால், அவரது கணவர் அபிஷேக் தப்பி ஓடி விட்டார்.இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீசின் குற்றப் பிரிவு துணைக் கமிஷனர் சதீஷ் குமார் கூறியதாவது:மீனாட்சியும் அபிஷேக்கும் தங்களுடை தொழில் திட்டங்களில் முதலீடு செய்ய வைத்து பலரிடம் கோடிக் கணக்கில் மோசடிச் செய்துள்ளனர். அந்தப் பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.கவர்ச்சியகரான முதலீட்டுத் திட்டங்களை அறிவித்து, முன்பணம் வாங்கியவுடன் தலைமறைவாகும் இருவரும் மொபைல் போன்களை அணைத்து விடுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இந்த தம்பதி ரெடிமேட் ஆடை வியாபாரம் செய்து வருவதும் அங்கு ஒரு பங்களாவில் ஆடம்பரமாக வாழ்கின்றனர் என்ற தகவல் சமீபத்தில் கிடைத்தது. விசாரித்து அதை உறுதி செய்து கொண்டபின், டில்லி போலீஸ் குழு ஜெய்ர்ப்பூர் சென்றது. அங்கு, மீனாட்சி சுற்று வளைத்துக் கைது செய்யப்பட்டார். ஆனால், அபிஷேக் தப்பி ஓடி விட்டார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.