கணவனுக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண் பிடிபட்டார்
பிரோசாபாத்:உத்தரப் பிரதேசத்தில், விஷம் கொடுத்து கணவனைக் கொலை செய்த பெண், அவரது காதலன் கைது செய்யப்பட்டனர். உ.பி., மாநிலம் பிரோசாபாதில் வசித்தவர் சுனில். இவரது மனைவி சஷி. திருமண உறவை மீறி, யாதவேந்தர் என்பவருடன் நெருங்கிப் பழகினார். இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்து, சுனிலை கொலை செய்ய திட்டமிட்டனர். யாதவேந்தர் கொடுத்த விஷத்தை, மே 13ம் தேதி கிச்சடி செய்து அதில் கலந்து சுனிலுக்கு கொடுத்தார். அதைச் சாப்பிட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்ட சுனில், டாக்டரிடம் சிகிச்சை பெற்றார். மறுநாள், தயிரில் விஷம் கலந்து கொடுத்தார். அதைக் குடித்த சுனில், மயங்கிச் சரிந்து மரணம் அடைந்தார். குடும்பத்தினர் இயற்கை மரணம் என்று நம்பினர். இறுதிச் சடங்குகள் செய்து சுனில் உடல் தகனம் செய்யப்பட்டது. ஆனால், அடுத்த சில நாட்களில் சஷியின் நடவடிக்கையில் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, துண்ட்லா போலீசில் புகார் செய்தனர். போலீஸ் நடத்திய விசாரணையில், கணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததை சஷி ஒப்புக் கொண்டார். சஷி மற்றும் அவரது காதலன் யாதவேந்தர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.