உறவினர் வீட்டுக்கு வந்த பெண் குளியலறையில் மர்ம சாவு
நெலமங்களா : உறவினர் வீட்டுக்கு வந்திருந்த பெண், குளியலறையில் சந்தேகத்துக்கு இடமாக இறந்து கிடந்தார்.ஆந்திராவின் திருப்பதியை சேர்ந்தவர் லட்சுமி, 25. பெங்களூரின், மல்லேஸ்வரத்தில் இவரது உறவினர் வீட்டின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தன் கணவருடன் வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்த பின், பெங்களூரு ரூரல், நெலமங்களாவின் அடேபேட்டையில் வசிக்கும் உறவினர் சுஹாசினியின் வீட்டுக்கு, லட்சுமியும், அவரது கணவரும் வந்திருந்தனர்.நேற்று காலை லட்சுமி, குளியலறைக்கு சென்றார். அவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. என்னவென்று பார்த்த போது, அவர் குளியலறையில் நிர்வாணமாக இறந்து கிடந்தார். அவரது முகத்தில் காயங்கள் காணப்பட்டன.வீட்டில் அனைவரும் இருந்தனர். குளிக்க செல்வதற்கு முன், லட்சுமியின் முகத்தில் எந்த காயமும் இல்லை. ஆனால் குளிக்க சென்ற சில நிமிடங்களில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். குளியலறையில் சுடுதண்ணீர் கருவி 'ஆன்' செய்திருக்கவில்லை. பக்கெட்டில் தண்ணீரும் இல்லை. ஆனால் அவர் இறந்து காணப்பட்டது, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.தகவலறிந்து அங்கு வந்த நெலமங்களா போலீசார், லட்சுமியின் உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பினர். போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். அவர் இறப்புக்கான காரணம் தெரியவில்லை. 'பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே, தெரியும்' என போலீசார் தெரிவித்துள்ளனர்.