மேலும் செய்திகள்
காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி
02-Oct-2025
பாலக்காடு:காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழந்த நிலையில், மக்கள் மறியலில் ஈடுபட்டனர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி அகளி தேக்குவட்டையை சேர்ந்தவர் சாந்தகுமார், 52; கூலி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, தாவளத்தில் இருந்து பைக்கில் வீட்டிற்கு சென்ற போது, மஞ்சகண்டி என்ற இடத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த யானை சாந்தகுமாரை தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலக்காடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின், சாந்தகுமாரின் உடலை நேற்று உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அப்போது, சாந்தகுமாரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி, அப்பகுதி மக்கள் தாவளத்தில் மறியலில் ஈடுபட்டனர். மண்ணார்க்காடு டி.எப்.ஒ., அப்துல்லத்தீப் தலைமையிலான வனத்துறை, போலீஸ் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். இழப்பீடு தொகை, 10 லட்சம் ரூபாயில், முதல் தவணையான, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை சாந்தகுமார் குடும்பத்திற்கு வழங்கினர். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு, வனத்துறையில் வேலை வழங்குவதாகவும், வனத்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டத்தை மக்கள் கைவிட்டனர். அதேபோல, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த ஜீவா நகரை சேர்ந்த தொழிலாளி காளியப்பன், 60, என்பவர், குத்தியாலத்துார் பள்ளம் அருகில் வனப்பகுதியில் உள்ள மாதேஸ்வரன் கோவிலுக்கு சென்றபோது, யானை தாக்கி உயிரிழந்தார்.
02-Oct-2025