திருவனந்தபுரம் : உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பலான எம்.எஸ்.சி., இரினா, கேரளாவின் விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்திற்கு நேற்று வந்தது. கேரளாவின் திருவனந்தபுரத்தில், அரபி கடலோரம் அதானி குழுமத்தின் சார்பில் விழிஞ்ஞம் துறைமுகம் உருவாக்கப்பட்டது. இத்துறைமுகத்திற்கு, உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் நேற்று வந்தடைந்தது.ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தை சேர்ந்த, எம்.எஸ்.சி., இரினா என்ற கப்பல், விழிஞ்ஞம் துறைமுகத்தில் நேற்று நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது. நான்கு கால்பந்து மைதானங்களின் அளவுள்ள எம்.எஸ்.சி., இரினா கப்பல், 1,312 அடி நீளமும், 201 அடி அகலமும் உடையது. இக்கப்பல் ஒரே நேரத்தில், 4,80,000 டன் எடையுள்ள 24,346 கன்டெய்னர்களை சுமக்கும் திறன் உடையது.இக்கப்பலை, கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த கேப்டன் வில்லி ஆன்டனி இயக்கி வருகிறார்.
சிங்கப்பூர் கப்பலில் தீ விபத்து
தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரைச் சேர்ந்த 'எம்.வி., வான் ஹாய் 503' என்ற சரக்கு கப்பல், நம் அண்டை நாடான இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் இருந்து மஹாராஷ்டிராவின் மும்பை துறைமுகத்திற்கு கடந்த 7ம் தேதி புறப்பட்டது.இக்கப்பல், கேரளாவின் கண்ணுார் துறைமுகம் அருகே வந்தபோது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த கடலோர காவல் படையினர், நம் கடற்படைக்கு சொந்தமான 'ஐ.என்.எஸ்., சூரத்' என்ற கப்பலை மீட்புப் பணிக்காக அனுப்பி வைத்தனர். கப்பலில், மொத்தம் 22 பேர் பணியில் இருந்த நிலையில், 18 பேரை நம் பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர். மற்றவர்களையும் மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.