உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எச்சரிக்கை அளவை எட்டிய யமுனை நதியின் வெள்ளம்

எச்சரிக்கை அளவை எட்டிய யமுனை நதியின் வெள்ளம்

புதுடில்லி:டில்லியில் பாயும் யமுனை நதியில் பாயும் வெள்ளத்தால், கரையோர பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, யமுனை நதி, 204.88 மீட்டர் அளவை, ஒல்டு ரயில்வே பிரிட்ஜ் பகுதியில் தொட்டது. அதையடுத்து, அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டில்லி நகரில் பாயும் யமுனை நதிக்கு, ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையிலிருந்து நீர் திறந்து விடப்படுகிறது. இந்த நீரின் அளவின் அடிப்படையில் வெள்ள அபாயம், அபாய எச்சரிக்கை, கட்டாயம் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. டில்லி நகரில் யமுனை நதியின் வெள்ள அபாய எச்சரிக்கை, 204.5 மீட்டர் என்ற அளவை தொடும் போது பிறப்பிக்கப்படுகிறது. அதுவே, 205.3 மீட்டர் என்ற அளவை, ஓல்டு ரயில்வே பிரிட்ஜ் பகுதியில் எட்டும் போது, அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மேலும், 206 மீட்டர் உயரத்தை தாண்டும் போது, நதி பாயும் பகுதிகளில், நதியோரங்களில் இருப்பவர்கள் கட்டாயம் வெளியேற்றப்படுகின்றனர். ஹத்னிகுண்ட் நீர் தடுப்பணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர், 48 - 50 மணி நேரத்தில், டில்லி நகருக்குள் வருகிறது. இதை, மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, அந்த தடுப்பணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, வினாடிக்கு, 61,000 கன அடியை தொட்டது. அதற்கு முன், இந்த பருவமழை காலத்தில் முதல் முறையாக, 50,000 கன அடியை தொட்ட படி இருந்தது. நேற்று கூடுதலாக, வினாடிக்கு 11,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், எச்சரிக்கை அளவை எட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை