அபாய அளவை நெருங்குது யமுனை நதி இரண்டு நாளில் ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயம்
புதுடில்லி:யமுனை நதியில் நீர்மட்டம் நேற்று காலை 9:00 மணிக்கு 205.22 மீட்டரைத் தாண்டியது. அபாய அளவான, 205.33 மீட்டரை வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது. அடுத்த இரண்டாவது நாளில் வெள்ளம் மாநகருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, டில்லி அரசின் நீர்வளத்துறை அதிகாரி கூறியதாவது: ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் யமுனை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. டில்லியைக் கடந்து செல்லும் யமுனை நதியில் நீர்மட்டம் பழைய ரயில்வே பாலம் அருகே நேற்று காலை 9:00 மணிக்கு 205.22 மீட்டரைத் தாண்டியது. அபாய அளவான 205.33 மீட்டரை வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது. யமுனை நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. டில்லி மாநகருக்குள் வெள்ளம் புகும் சூழ்நிலையைக் கையாள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வஜிராபாத் தடுப்பணையில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு 44,970 கன அடியும், ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து 46,968 கனஅடியும் தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. டில்லியில் பழைய ரயில்வே பாலம் அருகில் தான், நீர்மட்டம் மற்றும் வெள்ள அபாயத்தைக் கணிக்கும் முக்கியப் பகுதியாக அமைந்து உள்ளது. அபாய எச்சரிக்கை அளவு, 204.50 மீட்டராக இருக்கும் அதே நேரத்தில் தற்போது 205.22 மீட்டரை தாண்டி வேகமாக உயர்ந்து வருகிறது. அபாய அளவான 205.33 மீட்டரைத் தாண்டி 206 மீட்டரை நெருங்கினால், நதியின் அருகில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்படுவர். இரண்டு தடுப்பணைகளில் இருந்தும் வெளியேற்றப்படும் தண்ணீர் டில்லியை அடைய 50 மணி நேரம் ஆகும். இருப்பினும் யமுனை நதி கரையோரத்தில் வசிப்போர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்வது நல்லது. வெள்ளம் புகுந்தவுடன் உடைமைகளை இழந்துதான் வெளியேற வேண்டும். எனவே, முன்னெச்சரிக்கையுடன் வீட்டில் உள்ள பொருட்களையும் இடம் மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.