மேலும் செய்திகள்
எச்சரிக்கை அளவை எட்டிய யமுனை நதியின் வெள்ளம்
08-Aug-2025
புதுடில்லி:“டில்லியில் வெள்ளம் ஏற்படும் சூழ்நிலை எதுவும் இல்லை; யமுனை நதியில் அதிகரித்துள்ள நீர்மட்டம் ஓரிரு நாட்களில் குறையும்,”என, முதல்வர் ரேகா குப்தா கூறினார். உத்தராகண்ட் மாநிலம் இமயமலை யமுனோத்ரியில் உற்பத்தியாகும் யமுனை நதி உத்தராகண்ட், ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியானா மற்றும் டில்லி வழியாக உத்தரப் பிரதேச மாநிலம் அலாகாபாத் வரை, 1376 கி.மீ., துாரம் பாய்ந்து கங்கை நதியுடன் கலக்கிறது. உத்தராகண்ட், ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் யமுனை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. டில்லி பழைய ரயில்வே பாலம் அருகே நேற்று முன் தினம் இரவு 7:00 மணிக்கு, அபாய அளவான 205.33 மீட்டரை தாண்டி 205.55 மீட்டரை எட்டியது. நேற்று காலை 8:00 மணிக்கு, 205.79 மீட்டரை எட்டியது. ஹத்னிகுண்ட் அணையில் இருந்து மணிக்கு, 38,361 கனஅடி, வஜிராபாத் தடுப்பணையில் இருந்து, 68,230 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுவதால், யமுனை நதியின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. கரையோர குடியிருப்புப் பகுதிக்குள் நேற்று யமுனை நீர் புகுந்தது. இதனால், அங்கு குடியிருந்தவர்கள் வீட்டின் மொட்டை மாடி மற்றும் மேல் தள கட்டடத்துக்கு இடம் பெயர்ந்தனர். தடுப்பணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர், டில்லியை அடைய 50 மணி நேரம் ஆகிறது. இரண்டு தடுப்பணைகளிலும் தொடர்ந்து நீர் வெளியேற்றப்படுவதால், டில்லியில் யமுனை ஆற்றில் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால், கரையோரத்தில் வசிப்போர் பாதுகாப்பான இடத்துக்கு செல்லும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், யமுனை கரையில் நதிநீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளை முதல்வர் ரேகா குப்தா நேற்று ஆய்வு செய்தார். அப்போது, நிருபர்களிடம் ரேகா கூறியதாவது: டில்லியில் வெள்ளம் ஏற்படும் சூழ்நிலை எதுவும் இல்லை. நதியில் நீர் முன்னோக்கி பாய்கிறது. தேங்கி நின்றால் தான் ஊருக்குள் வெள்ளம் வரும். நீர் மட்டம் உயர்வதால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. யமுனை நதி நீர்மட்டம் ஓரிரு நாட்களில் குறைந்து விடும். நிலைமை முற்றிலும் கட்டுக்குள் உள்ளது. யமுனை பஜாரைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உணவு மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறினர். எனவே, கரையோர பகுதிகளில் சூரிய சக்தியால் இயங்கும் விளக்குகள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வெள்ளக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. மீட்புக் குழுக்களும் தயார் நிலையில் இருக்கின்றன. எந்த சூழ்நிலையையும் சமாளிக்கத் அரசு தயாராக இருக்கிறது. டில்லி மக்களுடன் அரசு நிற்கிறது. டில்லி மக்களின் பாதுகாப்புக்கும் நல்வாழ்வுக்கும் தான் அரசு முன்னுரிமை அளிக்கிறாது. எனவே, மக்களுக்கு எந்தக் கவலையும் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார். மிதமான மழை டில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் இடியுடன் கூடிய மழை பெய்தது. காஷ்மீரி கேட், சீலம்பூர், படேல் நகர், செங்கோட்டை, பிரீத் விஹார், புத்த ஜெயந்தி பூங்கா, ஜனாதிபதி மாளிகை மற்றும் ராஜிவ் சவுக் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது. அதேபோல ஐ.டி.ஓ., டில்லி கன்டோன்மென்ட், இந்தியா கேட், அக் ஷர்தாம், சப்தர்ஜங், லோதி சாலை, நேரு ஸ்டேடியம், ஆர்.கே.புரம், டிபன்ஸ் காலனி, லஜ்பத் நகர், ஹவுஸ் காஸ், மாளவியா நகர், கல்காஜி மற்றும் துக்ளகாபாத் ஆகிய இடங்களிலும் இடியுடன் கூடிய மழை கொட்டியது. நொய்டாவில் முகாம் யமுனை நதியில் நீர் மட்டம் அதிகரித்து வருவதால், புதுடில்லி அருகே நொய்டாவின் ஜேவர் மற்றும் ரபுபுரா பகுதிகளில் ஐந்து வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பலைடா கதர், கரவுலி பங்கர், மெஹந்திபூர், சிரவுலி பங்கர், பலஹாகா மற்றும் பேகுமாபாத் ஆகிய கிராமங்களில் உள்ள வயலுக்குள் யமுனை நதிநீர் புகுந்ததது. இதுகுறித்து, ஜேவர் தாசில்தார் ஓம்பிரகாஷ் பாஸ்வான் கூறியதாவது: வெள்ள நிவாரண முகாம்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு நிலைமை கண்காணிக்கப்படுகிறது. நெவ்லா துவக்கப் பள்ளி, ஜுப்பா துவக்கப் பள்ளி, பாய்பூர் பிராமணனில் ஷிவ் மந்திர், பலைடா பங்கர் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஜேவர் ஜந்தா இன்டர் கல்லுாரி ஆகிய ஐந்து இடங்களில் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. தலைநகர் டில்லியில் யமுனை நதி நீர்மட்டம் வெள்ள அபாயத்தைக் கண்காணிக்கும் கட்டுப்பட்டு அறையுடன், கவுதம் புத்தா நகர் மாவட்ட கண்காணிப்பு அலுவலகம் இணைந்து செயல் படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
08-Aug-2025