குறைய துவங்கியது யமுனை நீர்மட்டம் படகு சவாரி செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
புதுடில்லி:யமுனை நதியில் அதிகரித்து வந்த வெள்ளம், லேசாக குறையத் துவங்கியுள்ளது. இருப்பினும், நதியின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டி 207.31 மீட்டரிலேயே இருக்கிறது. இது, படிப்படியாக குறையும் என நீர்வளத்துறை அதிகாரிகள் கணித்துள்ளனர். டில்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தராகண்ட், ஒடிசா, ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகியவை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஹிமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் பெய்யும் கனமழையால் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதில், யமுனை நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், டில்லியில் கரையோரப் பகுதியில் வீடுகள், கடைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. டில்லியில் யமுனை நதியின் நீர்மட்டம் அபாய அளவான 206 மீட்டரை, 2ம் தேதி மாலை 4:00 மணிக்கு தாண்டி, 206.03 மீட்டரை எட்டியது. அதைத் தொடர்ந்து அதிகரித்து வந்த நீர்மட்டம் நேற்று முன் தினம் 207.48 மீட்டரை எட்டியது. இந்நிலையில், நேற்று காலை 6:00 மணிக்கு, 207.35 மீட்டராக குறைந்தது. அதைத் தொடர்ந்து காலை 7:00 மணிக்கு 207.33 மீட்டராகவும், காலை 8:00 மணிக்கு 207.31 மீட்டராகவும் குறைந்தது. யமுனை நதியின் நீர்மட்டம் படிப்படியாக குறையும் என கணித்துள்ள நீர்வளத்துறை அதிகாரிகள் யமுனை நதியில் நீச்சல் அடிக்கவோ, படகு சவாரி செய்யவோ வேண்டாம் என பொது மக்களை எச்சரித்து உள்ளனர். மிதமான மழை டில்லி மற்றும் புறநகரில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் மிதமான மழை பெய்தது. நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில் சப்தர்ஜங் - 0.76 செ.மீ., பாலம் - 1.33 செ.மீ., லோதி சாலை - 0.32 செ.மீ., ரிட்ஜ் - 0.52 செ.மீ., மழை பதிவாகி இருந்தது. வெப்பநிலை நேற்று 33 டிகிரி செல்ஷியஸ் பதிவாகியுள்ளது. 'விரைந்து உதவுங்கள்' வடகிழக்கு டில்லி சாஸ்திரி பூங்கா நிவாரண முகாமில், முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ஆய்வு செய்தார். நிவாரண முகாம்களில் தங்கியிருந்தோரிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அதன் பின், நிருபர்களிடம் கெஜ்ரிவால் கூறியதாவது: பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு மத்திய அரசு நிவாரணப் பொருட்களை உடனே அனுப்பியது பாராட்டுக்குரியது. அதேபோல, டில்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு சரியான நேரத்தில் உதவி கிடைக்க வேண்டும். நிவாரண முகாம்களில் தங்கியிருப்போருக்கு சரியான நேரத்தில் உணவு கிடைக்கவில்லை. கொசுத் தொல்லை அதிகமாக இருக்கிறது. மழையும் இடைவிடாமல் பெய்து வருகிறது. இயற்கை பேரிடர் நேரத்தில் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டியது அரசின் கடமை. லேசான மழைக்கே டில்லி மாநகர் முழுதும் சாலைகள் வெள்ளத்தில் மூழ்குகின்றன. கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால்வாய்களில் துார்வாரும் பணி சரியான நேரத்தில் நடக்கவில்லை. மழைநீருடன் கழிவுநீரும் பல இடங்களில் தேங்கி நிற்கிறது. பல பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், ஜம்மு- - காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் மத்திய அரசு விரைந்து உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஆண் உடல் மீட்பு
வடகிழக்கு டில்லி கர்ஹி மெந்து கிராமத்தில் வசித்த ஓம்பீர்,50, புஸ்தா சாலையில், 3ம் தேதி காலை 8:30 மணிக்கு தன் வீட்டை விட்டு வெளியேறி வெள்ளத்தில் நடந்து சென்றார். அதன் பின் அவரைக் காணவில்லை. மாவட்ட மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். நேற்று காலை, 11:00 மணிக்கு ஓம்பீர் உடல் கண்டுபிடிக்கப்பட்டு, உடற்கூறு ஆய்வுக்காக ஜி.டி.பி., அரசு மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டது. கனமழையால் யமுனை நதியில் அபாய அளவையும் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் டில்லியின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சுவர் இடிந்து ஒருவர் காயம்
தெற்கு டில்லி கிரேட்டர் கைலாஷில், டாடா டெலிகாம் மற்றும் வனத்துறை ஆகியவற்றால் பராமரிக்கப்பட்டு வந்த 35 அடி நீள சுவர் நேற்று காலை இடிந்து விழுந்தது. இடிபாட்டில் சிக்கி காயம் அடைந்த, மனோஜ் என்பவர், எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சுவர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த, ஐந்து வாகனங்கள் சேதம் அடைந்தன. கொசுக்கடியில் அவதி
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தினமும் லாரிகளில் உணவு கொண்டு வரப்பட்டு வழங்கப்படுகிறது. குழந்தைகள் உட்பட அனைவரும் நீண்ட வரிசையில் நின்று உணவு பெற்றுக் கொள்கின்றனர். யமுனா கதர் முகாமில் தங்கியுள்ள சாந்தி கூறுகையில், “கொசுக்கள் அதிகமாக இருக்கின்றன. அதனால், இரவில் நிம்மதியாக துாங்க முடியவில்லை. வழங்கப்படும் உணவும் கூட சரியாக வேகாமல், அரிசியாக இருக்கிறது. பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது,”என்றார். விவசாயி ராம் கிஷன் கூறுகையில், “அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. குடும்பத்துடன் நிவாரண முகாமில் தங்கியிருக்கிறேன்,”என்றார் வேதனையோடு. மயூர் விஹார் நிவாரண முகாமில் ஆறு மாத குழந்தையின் தாய், பூனம் கூறுகையில், “பச்சிளங் குழந்தையுடன் முகாமில் மிகவும் கஷ்டப் படுகிறேன். குழந்தையின் உடல்நலம் குறித்து மிகவும் கவலையாக இருக்கிறது,”என்றார். யமுனா கதரைச் சேர்ந்த ராஜேஷ், “கடந்த ஆண்டுதான் கடன் வாங்கி வீட்டை சீரமைத்தேன். ஆனால், அந்த வீடு முழுதும் வெள்ளத்தில் மூழ்கி விட்டது. ''அனைத்துப் பொருட்களும் நீருக்குள் மூழ்கிக் கிடக்கின்றன. வீட்டை எப்படி சீரமைப்பேன்; கடனை எப்படி அடைப்பேன் என்றுதான் தெரியவில்லை,” என்றார். பலர் தங்கள் வீடுகளில் எடுத்து வந்திருந்த பாத்திரங்கள், மெத்தைகள் மற்றும் மரக் கட்டில்களை சாலையோரத்தில் போட்டு வைத்திருக்கின்றனர். பஞ்சாபில் குறையுது மழை
கனமழை மற்றும் வெள் ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் மாநிலத்திலும் மழை லேசாக குறையத் துவங்கி யுள்ளது. நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் லூதியானா 0.98 செ.மீ., மழை மட்டுமே பெய்துள்ளது. பாட்டியாலா - 0.18 செ.மீ., குருதாஸ்பூர் - 0.17 செ.மீ., பரித்கோட் - 0.35 செ.மீ., மழை பதிவாகி இருந்தது. சண்டிகரில் 0.9 மி.மீ., மழை பெய்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் கர்னால் - 9 மி.மீ., நர்னால் - 2.85 செ.மீ., ரோஹ்தக் 1.74 செ.மீ., நூஹ் - 2 மி.மீ., மழை பெய்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, 1.71 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசம் அடைந்துள்ளன. அமிர்தசரஸ், குருதாஸ்பூர், கபுர்தாலா மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை ஆய்வு செய்த மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், ''வெள்ள சேதத்தை மதிப்பிட மத்திய அரசின் இரண்டு குழுக்கள் பஞ்சாபுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும். அவர்கள் சமர்ப்பிக்கும் அறிக்கையை பரிசீலித்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும்,” என்றார். கரை உடையும் அபாயம்
சட்லஜ் நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக, கரை பலவீனம் அடைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சஸ்ராலி, பூண்ட், ராவத், ஹவாஸ், சீரா, பூத்கர், மங்லி தாண்டா, தேரி, கவாஜ்கே, காசி குர்த், மங்லி கதர், மத்தேவாரா, மங்காட் மற்றும் மெஹர்பன் உள்ளிட்ட கிரா மங்களுக்குள் வெள்ளம் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.