| ADDED : செப் 26, 2024 09:34 PM
புதுடில்லி: தன்னை எதிர்க்கட்சியினரின் பிரதமர் வேட்பாளராக இருக்கும் படி, லோக்சபா தேர்தலுக்கு முன்னதாகவும், தேர்தலுக்குப் பிறகும் ஆபர்கள் வந்தது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவர்.இவர், தனக்கு பிரதமர் பதவி அளிக்க எதிர்க்கட்சியினர் முன் வந்ததாக சமீபத்தில் தெரிவித்து இருந்தார்; தனக்கு அதில் விருப்பமில்லை என்றும் கூறியிருந்தார். இந்தநிலையில் டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இது பற்றி மேலும் விளக்கம் அளித்தார். எனக்கு பிரதமர் பதவி அளிப்பதாக கூறிய எதிர்க்கட்சியினரிடம், ' ஏன் என்னை பிரதமர் ஆக்க முயற்சிக்கிறீர்கள், ஏன் நான் பிரதமர் மோடியுடன் இருக்கக் கூடாதா' என்று, அவர்களிடமே திருப்பி கேட்டதாக கூறினார். எதிர்க்கட்சியினரின் பிரதமர் வேட்பாளராக இருக்கும்படி, தேர்தலுக்கு முன்னதாகவும், தேர்தலுக்குப் பிறகும், தனக்கு வாய்ப்புகள் வந்ததாக கட்காரி கூறினார். பிரதமர் மோடி அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்பினால், அவருக்கு பதில் யார் வர வாய்ப்புள்ளது என்ற கேள்விக்கு கட்காரி பதிலளித்தார். நான் பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை. இப்போது நான் வகிக்கும் பதவியே எனக்கு திருப்தி அளிப்பதாக உள்ளது என்றார் கட்காரி. நான் கட்சியின் சாதாரண உறுப்பினர். அமைச்சர் ஆகாவிட்டால் கூட நான் வருத்தப்பட மாட்டேன். நான் எனது பணியை செய்து கொண்டே இருப்பேன் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டேன் என்று கட்காரி கூறினார்.