காரில் தீப்பிடித்து இளைஞர் பலி
புதுடில்லி:ஓடும் காரில் தீப்பிடித்து, டிராவல்ஸ் உரிமையாளர் உடல் கருகி உயிரிழந்தார். ஹரியானா மாநிலம் குருகிராம் பாலம் விஹாரில் வசிப்பவர் சந்தீப்,42. புதுடில்லி ராமகிருஷ்ணாபுரத்தில் டாக்ஸி டிராவல்ஸ் நடத்தி வந்தார்.நேற்று முன் தினம் இரவு 10:00 மணிக்கு தன் அலுவலகத்தில் இருந்து, 'டொயோட்டா கிளான்ஸா' காரில் வீட்டுக்குச் சென்றார்.பிஜ்வாசன் மேம்பாலத்திலிருந்து துவாரகா விரைவுச்சாலை நோக்கி 10:30 மணிக்கு கார் சென்ற போது, திடீரென காரில் தீப்பற்றியது. காரை ஓட்டிய சந்தீப், எவ்வளவோ முயன்றும் கதவைத் திறக்க முடியவில்லை. அவர் மீதும் தீப்பற்றியது.அந்த வழியாகச் சென்றவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இரண்டு வண்டிகளில் வந்த தீயணைப்புப் படையினர், இரவு 11:20 மணிக்கு தீயை அணைத்தனர். கார் கதவை உடைத்து, உள்ளே கருகிக் கிடந்த சந்தீப் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து கபஷேரா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.