உள்ளூர் செய்திகள்

வெளிநாட்டு மாணவர்களின் பார்வையில் இந்திய உயர்கல்வி!

இன்றைய தினம் வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கவிரும்பும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் இந்தியாவுக்கு உயர்கல்விக்காக வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது ஆச்சரியமான செய்தியாகும். குறைவான கட்டணம், தொழில் முறையான கல்வி மற்றும் சர்வதேசத் தரம் ஆகியவையே இதற்குக் காரணமாக அறியப்படுகிறது. இது குறித்த சில தகவல்களை இந்திய கலாசார உறவுக்கான மையம் (ஐ.சி.சி.ஆர்.,) வெளியிட்டுள்ளது. அவற்றில் சில இங்கே தரப்படுகின்றன. சராசரியாக 70 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்து 500 மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் கல்வி பயில வருகின்றனர். ஐ.சி.சி.ஆர்., வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயிலுவதற்கான உதவித்தொகைகளைத் தந்து வருகிறது. இந்தியாவில் கல்விக் கட்டணங்கள் குறைவாக இருப்பதுடன், தரம் வாய்ந்த நல்ல கல்வி குறுகிய காலத்திலேயே தரப்பட்டுவிடுகிறது. இதனால் வெளிநாட்டு மாணவர்களுக்கு குறுகிய காலத்திலேயே படிப்பை முடிக்க ஏதுவாக இருப்பதுடன் நல்ல வேலையும் கிடைத்துவிடு கிறது. தொழில் நுட்ப அம்சங்களில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவது வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க முக்கியக் காரணமாகும். பார்மசி போன்ற படிப்பை இந்தியாவில் 4 ஆண்டுகளில் படிக்க முடியும். டான்சானியா போன்ற நாடுகளில் இதே படிப்பை முடிக்க 8 முதல் 12 ஆண்டு ஆகிறது. எனவே குறுகிய காலத்தில் தரமான கல்வியைப் பெற உதவும் நாடாக இந்தியா அறியப்படுகிறது. பொருளாதாரம் தொடர்புடைய இந்திய உயர்படிப்புகள் குறைந்த கட்டணம் மற்றும் தரத்தினால் பெயர் பெறுகின்றன. இங்கு படிப்பவர்களுக்கு உலகில் எந்தப் பகுதியிலும் வேலை கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதே மாதிரியாக இசை மற்றும் நடனத் துறையும் விளங்குகிறது. அனைவரும் அணுக முடியும் தன்மை, சிறந்த பாடப் பகுதிகள் போன்ற அம்சங்களை இந்திய உயர்கல்வித் துறை உள்ளடக்கியுள்ளது. ஐ.நா., சபைக்கான பணிகளில் இணைய விரும்புபவர்கள் வெளிநாடு சென்று படிப்பதையே விரும்புகின்றனர். இந்தச் சூழலில் இந்தியாவின் கல்வி முறையானது பல்வேறு காரணங்களுக்காக விரும்பப்படுவதில் ஆச்சரியமில்லை. உலகெங்கும் சுய கலாசார அழிவு காணப்படும் நிலையில் இந்தியாவில் மட்டுமே பரந்து விரிந்த கலாசார மதிப்பீடுகள் உள்ளதாலும் வேத கலாசாரம் இன்னும் வேரூன்றி இருப்பதாலும் வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவுக்கு வருகின்றனர் என்றே துறையினர் கருதுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !