உள்ளூர் செய்திகள்

உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்த அரசின் முயற்சிகள்

திறன்மிக்க இளம் தலைமுறையை ஆசிரியப்பணிக்கு ஈர்ப்பது மற்றும் பணியில் தொடர வைப்பது போன்ற அம்சங்களில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் கல்வித்தரம் மேம்படவில்லை என்று மனிதவள அமைச்சகத்தின் சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகளில் ஒருபகுதியாக பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதங்களில் கணிசமான முன்னேற்றங்கள் ஏற்பட வழிகள் உருவாகியுள்ளது. ஆராய்ச்சிப்படிப்பான பி.எச்.டி., முடித்தவர்கள் மட்டுமே இனி ஆசிரியர்களாக பணி நியமனம் பெறுவது, பணி உயர்வுகள், பேராசிரியர் நியமனங்களில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் மனிதவள அமைச்சகத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், ஏற்கனவே பேராசிரியர் பணியில் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. பேராசிரியர்களை இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளை வழங்கும் கல்லூரிகளில் நிறுவவும், இளநிலை கல்லூரிகளில் அசோசியேட் பேராசிரியர்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் பேராசிரியர்களாக இருக்கும் என்றும் தெரிகிறது. ஒவ்வொரு கல்லூரியிலும் உள்ள துறைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேராசிரியர்களின் எண்ணிக்கையும் இருக்கும் என்றும் தெரிகிறது. அரசின் இந்த முயற்சிகள் ஆசிரியப்பணி இழந்து வரும் கவுரவத்தை மீட்டுத்தரும் என்றும் கூறப்படுகிறது. மத்திய பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் 25 சதவீத ஆசிரியப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மாநிலம் தழுவிய கல்லூரிகளில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருப்பது கவலை தரும் செய்தியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !