உள்ளூர் செய்திகள்

கல்வி நிறுவனங்களைத் துவக்கும் தொழில் நிறுவனங்கள்

பொதுவாக, பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் போன்றவை தொழில்துறை நிபுணர்களை உருவாக்கும். அவ்வாறு உருவாக்கப்பட்ட மாணவர்களை, பெரு நிறுவனங்கள் முதற்கொண்டு, சிறு நிறுவனங்கள் வரை பணிக்கு அமர்த்திக் கொள்வார்கள். இதுதான் இன்றுவரை பொதுவாக இருந்துவரும் நடைமுறை என்றாலும், இன்று பல நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான மனித வளங்களை உருவாக்க, தாங்களாகவே கல்வி நிறுவனங்களை உருவாக்கிக் கொள்கின்றன. முன்பு, டாடா மற்றும் பிர்லா குழுமங்கள் போன்ற பெரு நிறுவனங்கள் தங்களுக்கான கல்வி நிறுவனங்களைத் துவங்கி வெற்றிகரமாக நடத்தின. தற்போது அந்த வரிசையில் சில நிறுவனங்கள் புதிதாக இணைந்துள்ளன. NIIT லிமிடெட் என்ற நிறுவனம், NIIT பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது. முதலில், பொறியியல் படிப்புடன் தொடங்கப்பட்ட அந்தக் கல்வி நிறுவனத்தில் தற்போது MBA படிப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பல்கலையானது, 1. தொழிற்சாலை தொடர்பானது 2. தொழில் நிறுவனம் தொடர்பானது 3. ஆராய்ச்சி தொடர்பானது 4. சிறப்பம்சங்கள் பொருந்தியவை போன்ற பல நோக்கங்களுடன் நிறுவப்பட்டுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதைத்தவிர, டெலிகாம் பொறியியல் துறையில் நிறுவப்பட்டிருக்கும் ஒரு புதிய நிறுவனமாக பாரதி டெலிகாம் ஸ்கூல் விளங்குகிறது. இதை பாரதி குரூப் என்ற தொழில் நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. மேலும், HCL நிறுவனத்தால், புதிதாக ஒரு கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இக்கல்வி நிறுவனம், கார்னிஜ் மெலன் பல்கலைக்கழகம்(Carnige Mellon University) போன்ற சில கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதே HCL நிறுவனமானது, நொய்டாவில் வேறு ஒரு புதிய கல்வி நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது. தற்போதைக்கு வெறும் பொறியியல் படிப்புடன் தொடங்கப்பட்டதாக அந்தக் கல்வி நிறுவனம் இருந்தாலும், எதிர்காலத்தில் பலவிதமான படிப்புகளையும், வசதிகளையும் கொண்ட ஒரு கல்வி நிறுவனமாகத் திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள், நடைமுறைரீதியாக சிறந்த தொழில்முறை பயிற்சிகளைப் பெறுவார்கள் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்