நுழைவுத் தேர்வு முறை மாற்றப்பட வேண்டும்
இந்தியாவில் தற்போது பள்ளி, கல்லூரி, வேலை என எதை எடுத்துக் கொண்டாலும் மாணவ சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தி அதன் மூலம் மாணவர்களை தேர்வு செய்கிறார்கள். இந்த வழிமுறை சரியானதா? இது அனைவருக்கும் பொருந்துமா? பள்ளியாக இருந்தாலும், கல்லூரியாக இருந்தாலும், அவரது திறனை பரிசோதித்து திறமையான மாணவரை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம்தான் பிரதானமாக உள்ளது. ஆனால் அந்த நோக்கத்திற்கு நுழைவுத் தேர்வு சரியானதாக உள்ளதா என்றால் இல்லை என்பதே பொதுவான பதிலாக இருக்கும். ஒரு மாணவரின் தேர்வு எழுதும் திறன், எழுத்தறிவு (ஸ்பெல்லிங்), நினைவுத்திறன், பொது அறிவு என அனைத்தையுமே இந்த நுழைவுத் தேர்வு மூலம் அறிந்து கொள்ள முடியுமா? இந்தியாவில் கேட், ஜிமேட், ஜேஇஇ என பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடைபெறுகிறது. மருத்துவம், பொறியியல், ஐஐடி, மேலாண்மை என ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் ஒவ்வொரு நுழைவுத் தேர்வுகள். பெரும்பாலான கேள்வித்தாள்கள் அனைத்துமே சரியான விடையை தேர்வு செய்யும் வகையிலேயே அமையும். பொதுவாக ஒரு பொறியியல் அல்லது மருத்துவ படிப்பில் சேரும் மாணவருக்கு, அவர் படித்த பாடத்தில் இருந்து வரும் கேள்விகளுக்கு மட்டும் சரியான பதில் அளிக்கும் திறன் இருந்தால் போதுமா? ஒரு பாடத்தை அப்படியே படித்து மனப்பாடம் செய்யும் திறன் உள்ள மாணவர்களாலுமே இது முடியுமே. அப்படி இருக்க ஒரு நுழைவுத் தேர்வில் கேட்கப்படும் 100 கேள்விகளில் பெரும்பாலான கேள்விகளுக்கு சரியான பதிலை எழுதும் மாணவரை சேர்த்துக் கொள்வதும், தேர்ச்சி பெறாத மாணவரை நிராகரிப்பதும் தவறானதே. ஒரு மாணவரிடம் எத்தனையோ திறமைகள் இருக்கலாம். மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் அளவிற்கு ஒரு மாணவருக்கு திறமை இருந்தும் இந்த ஒரு நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறாத காரணத்தால் அவருக்கு மருத்துவப் படிப்பில் சேர்க்கை நிராகரிக்கப்படுவது பெரும் தவறல்லவா. அதேப்போல பொறியாளராகத் தேவையான அனைத்துத் தகுதிகளையும் ஒரு நுழைவுத் தேர்வு மூலமாக பல்கலைகள் அறிந்து கொள்கின்றனவா.. ஒரு கருவியை உருவாக்குவது, சவாலான நேரங்களை கையாளுதல், போன்ற திறன் உள்ளதா என்பதை நுழைவுத் தேர்வுகள் மூலம் அறிந்து கொள்கிறோமா? எந்த கேள்விகளும் விடைகாணாத கேள்விகளாகவே உள்ளன. இந்தியாவில் மட்டுமே இப்படி வெறும் எண்களையும், எழுத்துக்களையும் கொண்ட நுழைவுத் தேர்வுகள் நடக்கின்றன. வளர்ந்த நாடுகளிலும், கல்வியில் பெரிய முன்னேற்றங்களைப் பெற்றுள்ள நாடுகளிலும் இவ்வாறான நுழைவுத் தேர்வு முறைகள் நடைபெறுவதில்லை. உதாரணமாக அமெரிக்காவில் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் தங்களது மாணவ சேர்க்கைக்கு ஏற்றுக் கொள்ளும் சாட் தேர்வின் கேள்வித்தாள் அமைந்துள்ள முறை எடுத்துக் கொள்ளலாம். இந்த கேள்வித்தாள் மாணவர்களின் செயல்திறன், சிந்தனை திறன், கடினமான சூழ்நிலைகளை கையாளும் திறன், சமயோஜித புத்தி போன்றவற்றை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும். ஒரு மாணவர் தான் கடைசியாக பயின்ற பாடத்தில் வரும் கேள்விகளையே நுழைவுத் தேர்வுகளில் எழுதி தேர்ச்சி பெற வேண்டியதன் அவசியம் என்ன, அவனது இறுதிப் படிப்பில் எடுத்த மதிப்பெண்ணையே அதற்கு சான்றாக எடுத்துக் கொள்ளலாமே.. ஒவ்வொரு படிப்பிற்கும் என்னென்ன அடிப்படைத் தகுதிகள் இருக்க வேண்டுமோ அதை மதிப்பிடும் வகையில் இந்த நுழைவுத் தேர்வுகள் அமைந்தால் மட்டுமே இந்தியாவின் உயர்கல்வித் திறன் அதிகரிக்கும். வரும் கல்வியாண்டில் இருந்து பொது மருத்துவ நுழைவுத் தேர்வு, பொறியியல் தேர்வு என அறிமுகமாக உள்ள நிலையில், நுழைவுத் தேர்வு முறையையும் புதிதாக அறிமுகப்படுத்தினால் மாணவர்களின் கல்வித் திறன் நிச்சயம் முறைபடும். உலகத் தரவரிசைப் பட்டியலிலும் சரி, உலக அளவிலும் சரி இந்திய பல்கலைகளும், இந்திய மாணவர்களும் தலைநிமிர்ந்து நிற்க முடியும்.