அறிவியல் துறையில் அதிநுட்ப முதுநிலைப் படிப்புகள்
கடந்த காலங்களைப் போலில்லை, இந்தியக் கல்வித்துறை. ஒரு குறிப்பிட்ட துறையின் பொதுவான முதுநிலைப் பட்டத்தை மட்டும் பெற இன்றைய இளைஞர்கள் தயாராக இல்லை. அதன் பல்வேறு நுட்பமான பிரிவுகள் பற்றியும், சவால்களும், வாய்ப்புகளும் நிறைந்த பாடப்பிரிவுகள் பற்றியும் நன்கு அறிந்தே உள்ளனர். தினமும் புதிதாக கண்டுபிடிக்கும் வாய்ப்புகளும், தொழில்நுட்பத்துடன் இணைந்த வேலைவாய்ப்பையும் அவர்கள் விரும்புகின்றனர். தொழிற்துறை சார்ந்த முதுநிலைப் படிப்புகளை தரம்மிக்க இந்தியக் கல்வி நிறுவனங்கள் பலவும் வழங்குகின்றன. அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாயில் இருந்து அதிகபட்சம் ஐந்து லட்சம் ரூபாய்க்குள் இப்படிப்புக்கான செலவுகள் அடங்கி விடுகின்றன. உயர்தர கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ., படிப்பதற்கான செலவை விட இது குறைவே. இத்தகு பாடப்பிரிவுகள் பற்றிய ஓர் அலசல். எம்.எஸ்சி., ஜியோஇன்பர்மேடிக்ஸ் புவித் தகவலியல்(ஜியோஇன்பர்மேடிக்ஸ்) பாடம் மாணவர்களிடையே அவ்வளவு பிரபலமில்லை. புவித்தரவுத் தொகுப்பு (ஜியோகிராபிக் டேட்டா பேஸ்) ரிமோட் சென்சிங், புவியமைப்பு தகவல் முறை(Geographical Information System) போன்றவற்றில் இப்படிப்பின் பயன்பாடு அதிகம். இப்படிப்பு 15 தேற்றம் முறையிலான பாடங்களையும், ஆறு மாத ஆய்வு மற்றும் ஆய்வுத்திட்டக் கருத்துரு சமர்ப்பித்தல் உள்ளிட்டவை கொண்டிருக்கிறது. 18 மாத படிப்பான இதற்கு 2.50 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். எம்.எஸ்சி.,/எம்.டெக்., இயற்பியல், கணிதம், புள்ளியியல், புவியியல், புவிஇயற்பியல், வானியல், கடலியல், தகவல் தொழில்நுட்பம், வேளாண்மை, நகர்ப்புற மற்றும் பிராந்திய திட்டமிடல், எம்.சி.ஏ., இயற்கை அறிவியல், சிவில் இன்ஜி., கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் இன்ஜி., உள்ளிட்ட மற்றும் இணையான படிப்புகளை முடித்திருக்க வேண்டும். டேராடூனில் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ரிமோட் சென்சிங் கல்வி நிறுவனத்தின் மூலம் இப்படிப்பு வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் இஸ்ரோவின் ஓர் அங்கம். உஸ்மானியா பல்கலைக்கழகம், குர்கான்(Gurgaon) இன்ஸ்டிடியூட் ஆப் ஜியோஇன்பர்மேடிக்ஸ் அண்டு டெக்னாலஜி, புனே சிம்பியாசிஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஜியோஇன்பர்மேடிக்ஸ் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களிலும் இப்படிப்பு வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு www.iirs.gov.in/index.php என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். எம்.எஸ்சி., இன்ஸ்ட்ரூமென்டேஷன் சயின்ஸ் அறிவியலின் நவீன பரிமாணத்தில் குறிப்பிடத்தக்க துறை இது. நவீன உபகரணங்கள் தொடர்பான இத்துறைக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. சொல்வதனால், தற்போதே இத்துறை சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்குத் தேவையும் அதிகம். தொழிற்சாலையில் உற்பத்தி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் இத்துறை சார்ந்தவர்களுக்குப் பணிவாய்ப்பு அதிகம். அனல் மின் நிலையங்கள், இரும்பு ஆலைகள், சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட தொழிற்சாலைகள் பணிவாய்ப்பகுள் உள்ளன. எம்.எஸ்சி., இன்ஸ்ட்ரூமென்டேஷன் படிப்பை புனே பல்கலைக்கழகம் வழங்குகிறது. இரண்டாண்டு படிப்பான இதற்கு ஆண்டுக்கு 58 ஆயிரம் ரூபாய் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும். இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், தொழிலியற்பியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் இளநிலை அறிவியல் அல்லது இன்ஜி., பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை http://unipune.ac.in/dept/science/Instrumentation_science/default.htm என்ற இணைய முகவரியில் காணலாம். குவாலியர் ஜிவாஜி பல்கலைக்கழகம், வேலுõர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி போன்ற கல்வி நிறுவனங்களிலும் இப்படிப்பு வழங்கப்படுகிறது. எம்.எஸ்சி., கணிதப்பயன்பாட்டியல்(Applications of Mathematics) கணிதத்தின் சிறப்பான பாகுபாடே கணிதப்பயன்பாட்டியல் ஆகும். நிதர்சன வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு கணிதப்பயன்பாட்டின் மூலம் தீர்வு காண்பதாகும். தகவல் தொடர்பு முறைகள், வானூர்தி, வாகனங்கள், சங்கிலித்தொடர் வினியோக முறை, சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளின் அடிநாதமாக கணிதப் பயன்பாட்டியல் உள்ளது. சென்னை மேத்தமெடிக்கல் இன்ஸ்டிடியூட் இரண்டாண்டுப் படிப்பை வழங்குகிறது. கல்விக்கட்டணம் 4,800 ரூபாய் மட்டுமே. முதலாண்டில் இரு பருவத்தேர்வுகளும்; இரண்டாமாண்டில் திட்ட ஆய்வறிக்கை சமர்ப்பித்தல், தொழில்சார் களப்பணி என்ற வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. கணிதத்தில் இளம் அறிவியல் பாடம் முடித்திருக்க வேண்டும். இயற்பியல், புள்ளியியல், இன்ஜினியரிங் பாடங்களும் விரும்பத்தக்கன. மேலும் விவரங்களுக்கு www.cmi.ac.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். சர்வதேச வர்த்தகச் செயல்முறை (Global Buiness Operations) மனிதவள மேம்பாடு, கணக்கு மற்றும் நிதி, வணிகம், சந்தையியல், தகவல் தொடர்பியல் துறைகளுடன் இப்படிப்பு தொடர்புடையது. உள்நாட்டுப் பொருளாதார நிலையில் சமகால மாறுபாடும், சர்வதேச நிலைகள் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றியும் விரிவாகக் கற்றுத்தருகிறது. சந்தை சார்ந்த வளர்ச்சி முறை குறித்தும் அறிந்து கொள்ளலாம். இரண்டாண்டு படிப்பான இதற்கு, பருவத்துக்கு 7,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பட்டப்படிப்பு ஒன்றில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டெல்லி பல்கலையின் ஓர் அங்கமான ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில்(SRCC) இப்படிப்பு வழங்கப்படுகிறது. மனிதவள மேம்பாட்டுத்துறை, சந்தை ஆராய்ச்சி, வங்கி போன்றவற்றில் வேலைவாய்ப்பு உள்ளது. வளாகத்தேர்வில் ஜி.இ., மணி, ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு, பிபால் ரிசர்ச், டிரிடென்ட் குழுமம் உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் பங்கேற்று சிறந்த மாணவர்களை அள்ளிக் கொள்கின்றன. இதர விவரங்களுக்கு www.srcc.edu இணையதளத்தைப் பார்வையிடுங்கள். எம்.எஸ்சி., பொதுசுகாதாரம் மற்றும் பூச்சியியல்(M.sc., Public Health Entomology) வெப்பமண்டல நாடுகளில் எளிதில் பரவக்கூடிய நோய்களான பிளேக், கொள்ளை நோய், டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களைத் தடுப்பது குறித்த ஆய்வில் புதுவை வெக்டார் கன்ட்ரோல் ஆய்வு மையம் (VCRC) முக்கியப் பங்கு வகிக்கிறது. உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து இத்துறை சார்ந்த படிப்பை, M.sc., Public Health Entomology என்ற பெயரில் வழங்குகிறது. இரண்டாண்டு படிப்பான இதற்கு, பி.எஸ்சி., விலங்கியல், தாவரவியல், வாழ்க்கை அறிவியல், மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், நுண்ணுயிரியல், உண்வேதியியல், கால்நடை மருத்துவம், எம்.பி.பி.எஸ்., - உயிரி தொழில்நுட்பவியலுடன்(பயோ டெக்னாலஜி) கூடிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பட்டங்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்விக்கட்டணமாக 5948 ரூபாய் செலுத்த வேண்டும். மிகச்சிறந்த மாணவர்கள் அதே நிறுவனத்தில் பணிப் பயிற்சியை ஊக்கத்தொகையுடன் பெறலாம். உலக சுகாதார நிறுவனம் சார்ந்த அமைப்புகள், பொதுசுகாதாரத்துறை, என்.ஜி.ஓ.,க்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெறலாம். படிப்பு குறித்த மேலும் விவரங்களை http://vcrc.res.in என்ற முகவரியில் காணலாம். குருகோவிந்த்சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்திலும் இப்படிப்பு வழங்கப்படுகிறது. எம்.எஸ்சி., உணவுத் தொழில்நுட்பம் (Food Technology) உலகமயமாக்கல் உணவுத் தயாரிப்பு நிறுவனங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உணவு சார்ந்த மக்களின் தேவைகள் ஒரு போதும் குறைவதாயில்லை; வெவ்வெறு வகைகளாக விரிவடையே செய்கிறது. உணவுசார் துறையில், அலகாபாத் பல்கலைக்கழகத்தின் உணவுத் தொழில்நுட்ப மையம் இரண்டாண்டு முதுகலைப் படிப்பை வழங்குகிறது. உணவுத் தொழிற்சாலை, தயாரிப்புக்கான தேவை, நுகர்வோர் விழிப்புணர்வு, உலகமயமாதல் உள்ளிட்ட பிரிவுகளில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. மேலும், இத்துறை சார்ந்த சட்டங்கள், விதிமுளைகள், முகவர் நெறிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கப்படுகின்றன. உணவு தயாரிப்பு மற்றும் பதப்படுத்துதல், காய்கறி, பழங்கள், தானியங்கள், பண்ணை உற்பத்திப் பொருட்கள், பால், இறைச்சி, மீன் உள்ளிட்ட உணவு தயாரிப்புகள் குறித்தும் அறிமுகம் செய்யப்படுகிறது. நான்கு பருவங்களாக இரண்டாண்டுகளுக்குக் கற்பிக்கப்படுகிறது. பி.எஸ்சி., வேதியியல், உயிரி வேதியியல், மனையியல், மனைப் பொருளியல், வேளாண்மை, வேளாண் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் இளநிலைப் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.allduniv-ips/index.php என்ற இணைய முகவரியைப் பார்வையிடலாம். மைசூர் மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆய்வு மையம்(CFTRI) நாக்பூர் பல்கலைக்கழகம், அனந்தபூர் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களிலும் இப்படிப்பு வழங்கப்படுகிறது. எம்.எஸ்சி., உயிரிபுள்ளியியல்(Biostatistics) வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியின் உயிரிபுள்ளியியல் துறை இப்படிப்பை இரண்டாண்டு படிப்பாக வழங்குகிறது. இரு ஆண்டுகளுக்கும் சேர்த்து 46 ஆயிரம் ரூபாய் கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கொள்ளை நோயியல், ஆய்வகங்கள், மருத்துவ விசாரணைகள் உள்ளிட்டவற்றுக்கு இத்துறை சார்ந்த படிப்பு உதவுகிறது. இரண்டாம் ஆண்டில், மாணவர்கள் மருத்துவமனைகளில் புள்ளிவிவர ஆலோசகர்களாக பயிற்சிக்கு அனுப்பப்படுகின்றனர். இரண்டாம் ஆண்டில் நிறைவான ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க வேண்டும். சர்வதேச மருந்துக்கம்பெனிகள் இந்தியாவில் அடியெடுத்து வைத்திருப்பதை அடுத்து, இத்துறை சார்ந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்திருக்கிறது. எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம், அமிர்தா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்டு ரிசர்ச் நிறுவனங்களிலும் இப்படிப்பு வழங்கப்படுகிறது. புள்ளியியலை முதன்மைப் பாடமாகவோ, துணைப்பாடமாகவோ படித்திருப்பது அவசியம். இத்துறை சார்ந்த மேலும் விவரங்களுக்கு www.cmc-biostatistics.ac.in என்ற இணைய முகவரியைப் பார்வையிடலாம். எம்.எஸ்சி., மருத்துவ நுண்ணுயிரியல் (Medical Microbiology) நோய்த்தாக்குதலுக்குக் காரணமான கரிமங்கள் பற்றி இவ்வியல் கற்றுத்தருகிறது. சில கரிமங்கள் எப்படி நோய்த்தொற்றுக்குக் காரணமாகின்றன, எப்படி பரவுகின்றன, மனித உடலில் அவை எப்படி வினைபுரிகின்றன, அவற்றை முற்றிலுமாக அழிப்பது எப்படி என்பவை உள்ளிட்டவை கற்பிக்கப்படுகின்றன. கண்ணூர் பல்கலைக்கழகத்தில், உயிரி மருத்துவ கருவியாக்கம் மற்றும் ஆய்வில் அணுகுமுறைகள், நோய் எதிர்ப்பியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் மருத்துவ மரபணுவியல், கிளினிக்கல் மைக்ரோ பயாலஜி, பரிசோதனை நுண்ணுயிரியல் உள்ளிட்ட பிரிவுகளை உள்ளடக்கி பாடத்திட்டம் அமைந்துள்ளது. இதே துறையில் இளநிலைப்பட்டம் பெற்றவர்கள் இரண்டாண்டு படிப்பாகவும்; பி.எஸ்சி பயாலஜிக்கல் சயின்ஸ், நுண்ணுயிரியல், உயிரிதொழில்நுட்பம், உயிரிவேதியியல், விலங்கியல், தாவரவியல், உயிரியலை ஒரு பாடமாகப் படித்த வேதியியல் பட்டதாரிகள் மூன்றாண்டு படிப்பாக படிக்கலாம். தளசேரியில் உள்ள ஸ்கூல் ஆப் ஹெல்த் சயின்ஸ் இப்படிப்பை வழங்குகிறது. மேலும் விவரங்களுக்கு www.kannuruniversity.ac.in என்ற இணைய முகவரியை அணுகலாம். ஜிப்மர் பல்கலைக்கழகத்திலும் இப்படிப்பு உள்ளது. எம்.எஸ்சி., மருத்துவ உயிரிவேதியியல்(Medical biochemistry) மூன்றாண்டு படிப்பாக ஜிப்மர் இதை வழங்குகிறது. ஆண்டுக்கு 1,200 ரூபாய் கட்டணம். சேர்க்கைக் கட்டணம் 3,000 ரூபாய். வேதியியல், உயிரி வேதியியல் பாடங்களில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். டெல்லி பல்கலைக்கழகம், கண்ணூர் பல்கலைக்கழங்களும் இப்படிப்பை வழங்குகின்றன. உயிரி வேதியியல் வினைமாற்றங்களைப் பற்றிய இப்படிப்பை முடித்தவர்கள், பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகளில் எளிதில் வேலைவாய்ப்பைப் பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு www.jipmer.edu என்ற வலைத்தளத்தைப் பார்வையிடலாம். Master's in Habitat policy &Practice மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்ஸ் நிறுவனம் இரண்டாண்டுப் படிப்பாக வழங்குகிறது. சமூக அறிவியல், சட்டம் பயின்றவர்களுக்கு எம்.ஏ., பட்டமாகவும்; உடலியல் அறிவியல், பொறியியல், கட்டடக் கலையியல் முடித்தவர்களுக்கு எம்.எஸ்சி., பட்டமாகவும் வழங்கப்படுகிறது. நகரியக் கொள்கை தொடர்பான துறைகளில் வேலைவாய்ப்பு பெறலாம். விடுதியில் தங்கிப் படிப்பவர்களுக்கு ஒரு லட்சத்து 27 ஆயிரத்து ரூபாயும்; மற்றவர்களுக்கு 70 ஆயிரம் ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு www.tiss.edu என்ற வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.