கிளினிக்கல் பொறியியல் படிப்பை மேற்கொள்ள தயாரா?
கடந்த 50 ஆண்டுகளாக, மருத்துவ சிகிச்சைத் துறையானது, தனக்குள் பல்வேறு நவீன அம்சங்களை உள்வாங்கி விரிவடைந்து வருகிறது. மேலும், புதிய மருந்துகள், தடுப்பு மருந்துகள், மருத்துவக் கருவிகள் மற்றும் பகுப்பாய்வு சோதனைக் கருவிகள்(Diagnostic techniques) உள்ளிட்ட துறைகள் தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வருகின்றன. நவீனகால மருத்துவ சிகிச்சையானது, பலவிதமான நவீன மருத்துவக் கருவிகளையும், தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி, அதற்கென பயிற்சிபெற்ற நிபுணர்களைக் கொண்டு, மக்களுக்கு சிகிச்சையளிக்கிறது. எனவே, ஒரு கிளினிக்கல் பொறியாளரின் பிரதானப் பணிகள் என்னவெனில், ஒரு மருத்துவ உபகரணத்தை வாங்குதல், நிறுவுதல் மற்றும் சோதனை செய்வதற்கு முன்பாக அதை மதிப்பாய்வு செய்வது, வழக்கமான பாதுகாப்பு சோதனைகள் மற்றும் முன்னேற்பாடு சோதனைகள் உள்ளிட்ட பலவிதமான உபகரணங்கள் தொடர்பானவை. ஒரு கிளினிக்கல் பொறியாளர் என்பவர், கிளினிக்கல் பணிச் சூழலில் நேரடியாகப் பணிபுரிவதால், மருத்துவ சூழல்களில் எதிர்கொள்ளப்படும் தொழில்நுட்ப பிரச்சினைகள் குறித்து அவர் நேரடியாக அறிந்து கொள்கிறார். எனவே, புதிய மருத்துவ தொழில் நுட்பங்களுக்கான முயற்சிகளை எடுத்து, அவற்றை மதிப்பாய்வு செய்வதில் அவர் முக்கியப் பங்கை வகிக்கிறார். Clinical Engineering துறையில் M.Tech படிப்பானது, வழக்கமான பொறியியல் பயிற்சியை, துடிப்பான கிளினிக்கல் செயல்பாட்டை இணைக்கும் பணியை செய்கிறது. இந்தப் படிப்பானது, மருத்துவ செயல்பாட்டில், பல்வேறான தொழில்நுட்ப உபகரணங்களின் பாதுகாப்பான பயன்பாட்டை உறுதிசெய்ய, தனது மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சியை அளிக்கிறது. மேலும், குறிப்பிட்ட கிளினிக்கல் சூழலில் எதிர்கொள்ளப்படும் 25 வகையான சிக்கல்களைக் கண்டறிவதற்கான மருத்துவப் பணியில் ஈடுபட்டு, அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு திறனை மாணவர்களுக்கு வழங்கும் நோக்கத்தைக் கொண்டிருப்பது இப்படிப்பின் சிறப்பம்சம். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிளினிக்கல் பயிற்சியாளர்கள்(Clinicians), மாணவர்களுடன் தொடர்பில் இருந்து ஆலோசனை வழங்குவார்கள். இந்த இருதரப்பாரின் சந்திப்பானது குறிப்பிட்ட இடைவெளிகளில் நிகழ்ந்து, தொடர்ச்சியான அளவிடுதல் நடைபெறும். உபகரண மேலாண்மை, பாதுகாப்பு மதிப்பாய்வு மற்றும் முன்னெச்சரிக்கை பராமரிப்பு போன்ற கிளினிக்கல் பொறியியல் செயல்பாடுகள் தொடர்பான பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கான தீர்வுகளை முன்னெடுப்பதில் மாணவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். ஒருவர், இப்படிப்பை முடித்தப் பிறகு, மருத்துவமனை அல்லது மருத்துவ உபகரண தொழிற்சாலை ஆகியவற்றில் பணியமர்த்தப்படுவார். ஆரம்ப நிலைப் பணியாக, கிளினிக்கல் பொறியியல் பணிகளின் மேற்பார்வையிடப்பட்ட மேலாண்மை என்ற பணி வழங்கப்படும். அதன்பிறகு, பலவிதமான பதவி உயர்வுகள் வழங்கப்படும். இத்துறையில் Ph.D மேற்கொண்டவர், மருத்துவமனைகளில், பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையிலான பணிகளைப் பெறுவார். இப்படிப்பில் சேர்வதற்கான தகுதிகள் B.E/B.Tech மற்றும் சிறப்பான GATE மதிப்பெண் கட்டணம் ரூ.45,000 முதல் ரூ.50,000 வரை. ஆரம்பகட்ட சம்பளம் வருடத்திற்கு, ரூ.7 முதல் 12 லட்சம். இப்படிப்பிற்கான கல்வி நிறுவனங்கள் IIT - Madras, CMC - Vellore மற்றும் SCTIMST ஆகியவை கூட்டாக இணைந்து இப்படிப்பை வழங்குகின்றன.