உள்ளூர் செய்திகள்

சர்வதேச உறவுகள் - துறை அறிமுகம்

சர்வதேச உறவுகள் படிப்பை பலரும் அரசியலறிவியல் படிப்போடு சேர்த்துக் குழப்பிக் கொள்வதை நாம் காணலாம். ஆனால் ஐ.ஆர்., எனப்படும் இத் துறை பொருளாதாரம், வரலாறு, சட்டம், தத்துவவியல், புவியியல், சமூகவியல், மானுடவியல், உளவியல், கலாச்சாரவியல், உலகமயமாக்கல், மானிட பாதுகாப்பு, அணுப் பரவல், தேசிய வாதம், பொருளாதார வளர்ச்சி, தீவிரவாதம், சுற்றுச் சூழலியல், மனித உரிமைகள் போன்ற பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கியது. இத் துறையில் அரசியல், பொருளாதாரம், சமூகவியல், கலாச்சாரவியல், மொழியியல் போன்ற பல பிரிவுகளைப் படிப்பதன் மூலமாக அரசியல்,பொருளாதார உத்திகளை வகுப்பதன் நுணுக்கங்களை அறிய முடிகிறது. நாம் வசிக்கும் நாட்டுடன் தொடர்புபடுத்தி வெளிநாட்டு மற்றும் உலகப் பிரச்னைகளைப் பற்றியும் அமைப்பைப் பற்றியும் படிக்கும் துறையே ஐ.ஆர்., எனப்படும் சர்வதேச உறவுகள் துறையாகும். இதில் சர்வதேச நிறுவனங்கள் (எம்.என்.சி.,), அரசு சாரா சேவை சர்வதேச அரசுத் தொடர்பு நிறுவனங்கள் (ஐ.ஜி.ஓ.,)ஆகியவை பற்றிய பகுதிகள் இடம் பெறுகின்றன. படிப்பதற்கு என்ன தேவை?இதைப் படிப்பதற்கு உள்நாட்டு அரசியல் சூழல் பற்றிய ஆர்வம் மற்றும் உலகளாவிய பார்வையும் அவசியம் தேவை. நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை மட்டும் பார்க்காமல் உலகளவில் நடக்கும் நிகழ்ச்சிகள் எப்படி நம் நாட்டு நிகழ்வுகளை பாதிக்கின்றன என்ற பார்வையும் இருக்க வேண்டும். சிறுவயது முதலே நாளிதழ்களையும் பல்வேறு இதழ்களையும் படித்து வரும் வழக்கம் கொண்டவர்களுக்கு இத்துறை பெரிய ஆர்வத்தைத் தூண்டும் துறையாக அமையும். பணி வாய்ப்புகள் எப்படி?பல்வேறு துறைகளுடன் இத் துறை தொடர்புடைய துறை என்பதால் இங்கு பணி வாய்ப்புகள் ஏராளம் இருக்கின்றன. இத் துறையில் பட்டம் அல்லது ஆராய்ச்சிப் படிப்புகளை முடிப்பவர்களுக்கு பாதைகள் தெளிவாக அமைகின்றன. இத் துறைப் படிப்புகளில் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு, கட்டுரை எழுதுதல், கணிதவியல், கம்ப்யூட்டர் பயன்பாடு, பொதுத்திட்ட ஆய்வு, ஆடியோ வீடியோ தயாரிப்பு என்ற பல்வேறு பயிற்சிகள் தரப்படுகின்றன. எனவே இப்படிப்புகளைப் படிப்பவர்கள் கல்வித் துறை, ஆராய்ச்சித் துறை, தூதரகப் பணி, நிர்வாகப் பணி, சட்டப் பணி, இதழியல், என்.ஜி.ஓ., பணி வாய்ப்புகள் என பல்வேறு பட்ட பணி வாய்ப்புகளைப் பெறலாம். எதிர்காலம் எப்படி?ஐ.ஆர்., துறை நவீன உலகத்தில் பல்வேறு நபர்களின் கோணத்தில் அரசியலை ஆராயும் உத்திகளைக் கற்றுக் கொடுக்கிறது. அதே போல பலம், பிரச்னைகள், நாகரிகம், ஆயுதக் கட்டுப்பாடு, தீவிரவாதம், சமூக மாற்றம், வெளிநாட்டுத் திட்டம், மனிதாபிமான உதவிகள், சர்வதேச அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றிலும் பயிற்சி தருகிறது. இதனால் ஐ.ஆர்., படித்தவர்களுக்கு பல்வேறு பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஐ.ஆர்., படித்தவர்களுக்கு ஆர்க்கிவிஸ்ட், டெமோகிராபர், டிப்ளமேட், வெளிநாட்டு உறவு குறித்த ஆய்வாளர், வெளியுறவு அதிகாரி, இமிகிரேஷன் சிறப்பு அதிகாரி, இன்டலிஜென்ஸ் ஸ்பெஷலிஸ்ட், லாங் வேஜ் ஸ்பெஷலிஸ்ட் போன்ற பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன.வெறும் தகுதிகளை விட இத் துறை குறித்த நுணுக்கமான திறன்கள் தான் இப் பணி வாய்ப்புகளைக் கொடுக் கின்றன. தகுதிகள்இத்துறை பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கியது என்பதால் ஐ.ஆர்., துறையில் பட்டம் பயிலுபவர்கள் கூடுதலாக ஒரு சட்டப்படிப்பும் முடித்தால் அது மிகவும் பலன் தரக்கூடியதாக அமைகிறது. பட்டப்படிப்பில் அரசியல் அறிவியல், வரலாறு, பொருளாதாரம் போன்றவற்றைப் படித்து ஐ.ஆர்., துறையில் பட்ட மேற்படிப்புகளைப் படிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஐ.ஆர்., படிப்புகளை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலும் படிக்கலாம். நியூயார்க் பல்கலைக்கழகம், ஜார்ஜ் டவுண் பல்கலைக்கழகம் போன்றவற்றில் இணைய ஜி.ஆர்.இ., டோபல் மதிப்பெண்கள் அவசியம். இதற்கு ஆண்டுக்கு 18 லட்ச ரூபாய் வரை கல்விக் கட்டணம் செலவாகும். சம்பளம் எப்படி?ஐ.ஆர்., படித்தவருக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நல்ல தேவை உள்ளது. இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பணி கிடைத்தால் மாதம் ரூ.20 ஆயிரம் முதல் 2.5 லட்சம் வரை சம்பளம் பெறும் வாய்ப்புள்ளது. என்.ஜி.ஓ., அல்லது இதழியல் பணியில் சேர்ந்தால் துவக்கத்திலேயே ரூ.10 ஆயிரம் சம்பளமாகப் பெற முடியும். கோல்கட்டாவிலுள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், கோட்டயத்திலுள்ள சர்வதேச உறவுகள் மற்றும் அரசியல் மையம் ஆகியவற்றில் இத்துறையின் சிறப்புப் படிப்புகளைப் படிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !