உள்ளூர் செய்திகள்

வெளிநாடு சென்று படிக்க வேண்டுமா

வெளிநாட்டில் கல்வி கற்க விரும்பும் மாணவர்கள், திட்டமிட்டு, சரியான முடிவெடுப்பது எப்படி என்பது குறித்து இந்த வாரம் பார்க்கலாம். எதற்காக வெளிநாட்டுக் கல்வி?1970ம் ஆண்டுகளில் வெளிநாட்டில் படிக்க செல்லும் மாணவர்களில் 90 சதவீதம் பேர் உதவித்தொகையுடன் படித்தனர். ஆனால் 2007ல் 90 சதவீதம் பேர் உதவித் தொகையின்றி படிக்கச் செல்கின்றனர். இதற்கு காரணம் வெளிநாட்டில் படிப்பதற்கு இந்தியாவில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது தான். இந்த கட்டுரையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் போது, உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் நாடுகளிலிருந்து, பிற நாடுகளுக்கு கல்விக்காக இடம் பெயர்ந்து கொண்டிருப்பார்கள். இந்தியர்கள் கல்வி கற்பதற்காக வெளிநாடுகளுக்கு செல்வது 70களில் குறைந்த எண்ணிக்கையுடன் தொடங்கியது. இந்த எண்ணிக்கை, 90 களின் முற்பகுதியில், அதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்தது. தற்போது ஒவ்வொரு ஆண்டும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளிநாட்டில் கல்வி கற்பதற்காக செல்கின்றனர். இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்களில் கல்விக்காக செல்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். வெளிநாடுகளில் அதிக அளவிலான இந்தியர்கள் சர்வதேச தரத்துடனான கல்வி கற்பது பெருமைக்குரிய விஷயம் தான். ஆனால் கல்விக்காக மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை ஆராய்ந்தால், நம் நாட்டில் கிடைக்கும் கல்வியின் தரம் பற்றிய உண்மை புலப்படுகிறது. குறிப்பாக இன்ஜினியரிங், மருத்துவம், நிர்வாகம், சட்டம், டிசைனிங், மீடியா, சுற்றுலா, பயோடெக்னாலஜி, விமானப் பயிற்சி, அப்ளைடு சயின்ஸ், கலை போன்ற பிரிவுகளில் இந்தியாவில் ஒரு சில கல்லூரிகளில் மட்டுமே தரமான கல்வி கிடைக்கிறது. இதனால் தான், மாணவர்கள் வெளிநாடுகளுக்கு படையெடுக்கின்றனர். தகவல் தொடர்பு வளர்ச்சியால், உலகமே ஒரு கிராமமாக சுருங்கி விட்டது. உலக அளவிலான வாழ்க்கை முறைக்கு இந்தியாவில் கிடைக்கும் உயர்கல்வி போதுமானதாக இல்லை என்று மாணவர்கள் உணரத் தொடங்கியுள்ளனர். இதுதான் நம் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று கல்வி கற்பதற்கு முக்கிய காரணம். 2007ம் ஆண்டில் அமெரிக்காவுக்கு அதிக அளவு மாணவர்களை அனுப்புவதில் சீனாவை விட இந்தியா முன்னிலை வகித்தது. இந்திய மாணவர்கள் படிப்பதற்காக வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு செல்வதால், அந்நாடுகளின் வெளிநாட்டு கொள்கைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஒரு இந்தியர், இந்தியாவை விட்டு வெளியேறலாம். ஆனால் அவரை விட்டு இந்தியா ஒருபோதும் வெளியேறாது. உலகின் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு குட்டி இந்தியா உருவாவதை பொறுத்திருந்து பார்ப்போம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !