ராணுவப் பணி வாய்ப்புகள் - சில தகவல்கள்
இந்திய ராணுவத்தின் 3 பிரிவுகளான தரைப்படை, விமானப் படை மற்றும் கப்பற்படை ஆகியவற்றில் பணி புரிவது என்பது நம்மில் பலருக்கும் ஒரு நீண்ட நாள் கனவாகவே இருக்கிறது. நாட்டுக்கான அர்ப்பணிப்பு உணர்வோடு இதை நாம் செய்வதோடு சிறப்பான பணித் தன்மையையும் பெறும் வாய்ப்பும் நமக்குக் கிடைக்கிறது. ராணுவப் பணி வாய்ப்புகள் பற்றிய தகவல்களை இக் கட்டுரையில் தருகிறோம். தரைப்படை அதிகாரிஇந்திய தரைப்படையில் அதிகாரி நிலையிலான பணி வாய்ப்புகள் அவ்வப்போது அறிவிக்கப்படுகின்றன. நவீன உயர் தொழில்நுட்பம் மற்றும் சிறப்பான பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கிய பணித் தன்மையை இவை கொண்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானவர்கள் தரைப் படை அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பிக்கிறார்கள். எனினும் மிகச் சிலர் மட்டுமே இதற்காக தேர்வு செய்யப்படுகிறார்கள். வாழ்வின் கடுமையான சூழல்களையும் தருணங்களையும் சந்தித்து அவற்றில் வெற்றி பெறும் உறுதியுடையவராக நாம் மாறிட தரைப் படை சிறப்பான வாய்ப்பை இப் பணி மூலமாகத் தருகிறது. என்.டி.ஏ., எனப்படும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்க்கப் பட்டு மிகச் சிறப்பான பயிற்சியைத் தருவதுடன் கலை/அறிவியல்/தொழில்நுட்பம்/கம்ப்யூட்டர் சயின்ஸ் புலங்களில் ஒன்றில் பட்டத்தையும் நாம் பெற முடிகிறது. தொழில்நுட்பப் புலத்தில் நுழைய விரும்பினால் அதிலும் பி.டெக்., தகுதியை வேலையோடு சேர்த்துப் பெற முடிகிறது. பாதுகாப்புச் சேவை ஊழியர் கல்லூரிக்காகத் தேர்வு செய்யப்பட்டால் அங்கு பயிற்சிக்குப் பின் பட்ட மேற்படிப்பு தகுதியையும் பெறலாம். இந்தியாவின் மிகச் சிறப்பான அகாடமிகளையும் பயிற்சி மையங்களையும் நமது தரைப்படை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 21 வயதில் தரைப்படை அதிகாரியாகப் பணி புரிய தேர்வு செய்யப்பட்டால் நம் வாழ்வின் தன்மையே மாறிவிடும் என்பது உண்மைதான். தரைப்படையில் பள்ளிப் படிப்பு முடித்தபின்போ கல்லூரிப் படிப்பு முடித்தபின்போ சேரலாம். நிரந்தர அதிகாரி நிலைப் பணிகளைப் பெற என்.டி.ஏ., அல்லது ஐ.எம்.ஏ.,வில் சேர வேண்டும். இதற்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் போட்டித் தேர்வு மூலமாகவே சேர்க்கை நடத்தப்படுகிறது. என்.டி.ஏ., இதில் ஜனவரி மற்றும் ஜூலையில் பயிற்சி தொடங்கப்படுகிறது. இதில் சேர விரும்புபவர்கள் 16 1/2 முதல் 19 வயதுக்குள் இருக்க வேண்டும். பிளஸ் 2 படித்து முடிப் பவராக இருக்க வேண் டும். இதற்கான தேர்வை யு.பி.எஸ்.சி., நடத்துகிறது. அதில் வெற்றி பெற்ற பின் எஸ்.எஸ்.பி., எனப்படும் நேர்முகத் தேர்வு முறைகளிலும் வெற்றி பெற வேண்டும். இத் தேர்வுக்கான அறிவிப்பு பொதுவாக மார்ச்/ஏப்ரல் மற்றும் அக்டோபர்/நவம்பரில் வெளியிடப்படுகிறது. ஐ.எம்.ஏ.,இதுவும் ஜனவரி மற்றும் ஜூலையில் பயிற்சிகளைத் தொடங்குகிறது. 19 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். பட்டப்படிப்பு தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். இத் தேர்வுக்கான அறிவிப்பும் பொதுவாக மார்ச்/ஏப்ரல் மற்றும் அக்டோபர்/நவம்பரில் வெளியிடப்படுகிறது. இன்ஜினிரியங் தகுதிக்கான வாய்ப்புஇந்தத் தகுதியைப் பெற்றிருப்பவருக்கு புதுடில்லியிலுள்ள டி.ஜி.சி. என்னும் ராணுவப் பிரிவு வாய்ப்புகளை அறிவிக்கிறது. 20 முதல் 27 வயதுக்குள் இருப்பவர் இந்த வாய்ப்பைப் பெறலாம். இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். எஸ்.எஸ்.பி., என்னும் நேரடி தேர்வு முறைகளில் வெற்றி பெற வேண்டும். இப் பணிகளுக்கான அறிவிப்பை Addl. Directorate General of Recruiting (TGC), Army HQ ஒவ்வொரு ஆண்டும் மார்ச்/ஏப்ரல் மற்றும் அக்டோபர்/நவம்பரில் வெளியிடுகிறது.