வேலைவாய்ப்பு சந்தையில் ஜொலிக்க...
கடந்த சில ஆண்டுகளாக வேலைவாய்ப்பின் போக்கு பெருமளவில் மாறியுள்ளது. முன் அரசுத்துறை வேலைவாய்ப்பையே பெருமளவில் சார்ந்திருந்தனர். இதற்காக கடுமையாக போராட வேண்டிய சூழல் இருந்தது. தற்போது தனியார் துறையும் வேலைவாய்ப்புகளை வாரி வழங்குகிறது. ஐ.டி., ஐ.டி., சார்பு துறைகள் மற்றும் இது தொடர்பான இதர துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. முன்பு வேலையை தேடி செல்ல வேண்டியிருந்தது. தற்போது வேலைவாய்ப்பு சந்தைகள் மூலமாக வேலையே, பட்டதாரிகளை தேடி வருகிறது. எல்லா நகரங்களிலும் வேலைவாய்ப்பு சந்தைகள் நடத்தப்படுகின்றன. உங்கள் அருகாமையில் வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்கள் குறித்து அறிந்து கொள்ள வேலைவாய்ப்பு சந்தைகள் உதவுகின்றன. சிலர் முதல் நேர்காணலை போல இவற்றை பதட்டத்துடன் அணுகுவார்கள். சிலர் வேலைவாய்ப்பு வழங்குவதில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக இதை பயன்படுத்திக் கொள்வார்கள். எதற்காக வேலைவாய்ப்பு சந்தைக்கு சென்றாலும் சரி. நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. எந்த வகையான நிறுவனங்கள் வேலைவாய்ப்பு சந்தையை நடத்துகின்றன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இவை குறித்து நன்கு விசாரிப்பது அவசியம். எந்த வகையான வேலைகளை அவர்கள் வழங்குகின்றனர்? கலந்து கொள்பவர்களிடம் எந்த வகையான திறன்களை எதிர்பார்க்கின்றனர்? முன்னரே அதிகமான தகவல்களை அறிந்து கொள்வதன் மூலமாக இத்தகைய சந்தைகளை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். வேலைவழங்குபவர்களிடம் கேட்க சில கேள்விகளை தயார் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்ற வேலை வழங்கும் நிறுவனங்கள் எவை என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக நீங்கள் தயார் செய்த ‘ரெஸ்யூமை’ சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இரண்டுமுறை நன்றாக வாசித்து எழுத்துப்பிழை, இலக்கணப்பிழைகள் இருக்கின்றனவா என சோதிக்க வேண்டும். நீங்கள் பிழைகள் இல்லை என உறுதிப்படுத்திக்கொண்ட பின்னரும் வேறு யாரிடமாவது கொடுத்து வாசித்துப்பார்க்கும்படி கேட்கலாம். குறிப்பாக முகவரி, இ-மெயில் முகவரி, போன் எண்களை சரிபார்த்துக்கொள்ளவும். சிறப்பாக உடையணிந்து கொள்ளவும். வேலை தேடுவதில் உங்களுக்குள்ள அக்கறையை உடைகளே காட்டிவிடும். ஆண்கள் காலர் வைத்த சட்டைகளை அணிந்து செல்வதே சிறந்தது. சந்தையில் இருக்கும் ஒவ்வொரு பூத்திலும் ரெஸ்யூமை கொடுத்தவாறு நகர வேணடாம். வேலை வழங்கும் நிறுவனத்திடம் சிறிதாவது பேச வேண்டும். கூட்டமாக இருக்கும் நேரத்தில் ரெஸ்யூம் கொடுப்பதை தவிர்க்கலாம். நீங்கள் முன்னரே தயாராகி இருக்கும் பட்சத்தில், தேவையற்ற கேள்விகளை வேலை வழங்கும் நிறுவனங்களிடம் கேட்க வேண்டிய அவசியம் இருக்காது. இதனால் அவர்கள் நேரம் வீணடிக்கப்படாமல் தவிர்க்கப்படும். அதற்கு பதிலாக நீங்கள் பணியாற்ற விரும்பும் பிரிவு குறித்து அவர்களிடம் விசாரிக்கலாம். அவர்கள் விரும்பும் திறன் உங்களிடம் உள்ளதா என்பது போன்ற தகவல்கள் அவர்களுக்கு உதவும். வேலைவழங்குபவர்கள் உங்களது அக்கறையை உணர்ந்து கொள்ள வேண்டும். உறுதியாக கைகுலுக்க வேண்டும். கண்களை நேராக பார்த்தவாறே உரையாட வேண்டும். எந்த வேலைக்கு செல்பவராக இருந்தாலும், ஆர்வமுடையவராகவும், நல்ல நடத்தைகள் உடையவராகவும் காட்டிக்கொள்ள வேண்டியது அவசியம். இறுதியில் நன்றி தெரிவிக்க வேண்டும். நிறுவனத்தின் விசிட்டிங் கார்டையோ, அல்லது அதன் பிரதிநிதியின் விசிட்டிங் கார்டையோ பெற்றுக்கொண்டால் இரண்டு நாட்களுக்கு பின்னர் நன்றி தெரிவித்து குறிப்பு அனுப்பலாம். நிபுணர்கள் இதை முக்கியமானதாக குறிப்பிடுகின்றனர். இது உங்களை நாகரிகமானவராக காட்டுவதோடு மட்டுமல்லாமல், வேலை குறித்த விஷயத்தில் உங்களை அக்கறையானவராகவும் காட்டும். நீங்கள் தான் வேலைக்கு சரியான நபர் என்பதையும் உணர்த்தும்.