சென்னை ஐஐடி உருவாக்கிய ஒய்டி ஒன் - இந்தியாவின் மிக இலகுவான இயங்கும் சக்கர நாற்காலி அறிமுகம்!
சென்னை: சென்னை ஐஐடி தமது ஆராய்ச்சித் திறனை மேலும் ஒரு பயனுள்ள சாதனமாக மாற்றி, சர்வதேச தரத்திற்கேற்ப உருவாக்கப்பட்ட ஒய்டி ஒன் (YD-One) என்ற மிக இலகுவான இயங்கும் சக்கர நாற்காலியை இன்று அறிமுகப்படுத்தியது.இந்த நாற்காலி, ஒவ்வொரு பயனாளியின் உடல் அமைப்பு, தோரணை, மற்றும் தினசரி தேவைகளுக்கேற்ப முழுமையாக தனிப்பயனாக்கப்பட்டதாக உள்ளது. வெறும் 9 கிலோ கிராம் எடையுள்ள இதன் வடிவமைப்பு, விண்வெளித் தரபொருட்கள் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளதால், வலிமையும், இயக்க திறனும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கார்கள், ஆட்டோக்கள், பொதுப் போக்குவரத்து வாகனங்களில் எளிதாக தூக்கி வைத்தல் மற்றும் கையாளுவதற்கும் இதன் வடிவமைப்பு வசதியாக அமைகிறது.சென்னை ஐஐடி வளாகத்தில் இன்று நடைபெற்ற வெளியீட்டு நிகழ்ச்சியில், மருத்துவமனை சேவைகள் (ஆயுதப்படைகள்) இயக்குநர் வைஸ் அட்மிரல் அனுபம் கபூர், சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் காமகோடி, திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மணீஷ் ஆனந்த், மற்றும் ஐசிஎம்ஆர் விஞ்ஞானி டாக்டர் ரவீந்தர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.வைஸ் அட்மிரல் அனுபம் கபூர் நிகழ்ச்சியில் உரையாற்றியபோது, சென்னை ஐஐடி உருவாக்கும் கண்டுபிடிப்புகள் இதயத்துடனும், மக்கள் வாழ்வில் நேரடியாக பயனளிக்கும்படியும் உருவாக்கப்பட்டுள்ளன. சுதந்திரம் என்பது இப்போது எல்லோருக்கும் சேரும் உரிமையாக இருக்க வேண்டும் - உடல் நிலை, பின்னணி, சூழ்நிலை என்பது பொருட்டல்ல என்று வலியுறுத்தினார்.சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில், சமூக நீதி மற்றும் உள்ளடக்கத்தை உறுதி செய்வதில் தொழில்நுட்பத்தின் பங்கு முக்கியமானது. இது நம் நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளமாக அமைகிறது என்றார்.இந்த சக்கர நாற்காலியின் பின்புலத்தினை உருவாக்கிய R2D2 மையத்தின் தலைவி பேராசிரியர் சுஜாதா ஸ்ரீனிவாசன், இந்தியாவுக்கே உரிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், உலக தரத்திற்கேற்ப உள்ளூர் சாதனங்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கிய பயணத்தின் முக்கிய கட்டமாக ஒய்டி ஒன் அமைந்துள்ளது, எனத் தெரிவித்தார்.இந்த சாதனத்தினை மொபிலிட்டி ஸ்டார்ட்-அப் நிறுவனமான ட்ரைவ் மொபிலிட்டி சந்தைக்குக் கொண்டு வர உள்ளது. இதன் மூலம், உயர்தர இயங்கும் சக்கர நாற்காலிகளை மலிவாக இந்தியா மற்றும் பிற வளர்ச்சியடைந்த சந்தைகளுக்கு வழங்க முடியும்.ட்ரைவ் மொபிலிட்டியின் ஆர்&டி தலைவர் டாக்டர் ரெஜின் ஜான் வர்கீஸ் கூறுகையில், சென்னை ஐஐடி உடன் இணைந்து, உலக தரத்திலான சக்கர நாற்காலிகளை இந்தியாவிலேயே தயாரிக்க முடிவது பெருமிதம் அளிக்கிறது. இதனால், தேவையுடையோருக்கு நிஜமான சுதந்திரத்தை வழங்க இயலும், என்றார்.ஒய்டி ஒன் அறிமுக நிகழ்வில், ட்ரிம்பிள் நிறுவனம் தனது சமூக பொறுப்புணர்வின் கீழ் 20 சக்கர நாற்காலிகளை வழங்கியது. மேலும், ஆர்ஆர்டி, ஷூக்கோ இந்தியா போன்ற நிறுவனங்களும் எதிர்காலத் தயாரிப்புகளில் பங்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளன.