ஆசிரியர் பணியில் சேர முடியாமல் பிரெஞ்சு பட்டதாரிகள் தவிப்பு… நியமன விதிகளை திருத்த நடவடிக்கை தேவை
புதுச்சேரி: ஆசிரியர் பணியில் சேர முடியாமல் பிரெஞ்சு பட்டதாரிகள் தவித்து வருகின்றனர். காலத்துகேற்ப நியமன விதிகளை திருத்த புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .புதுச்சேரி அரசின் பள்ளி கல்வித் துறையில் 2,225 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 588 விரிவுரையாளர் பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மட்டுமின்றி, தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, தெலுங்கு, மலையாளம், அரபிக், சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிப்பாட ஆசிரியர்களும் உள்ளடக்கம்.இங்கேயும் இல்லை; எங்கேயும் இல்லைமொழி பாட ஆசிரியர் பணியிடங்களில் பிரெஞ்சு ஆசிரியர்கள் மிக முக்கியம். பிரெஞ்சு ஆசிரியராக பணியில் சேர டிகிரி மட்டுமின்றி பி.எட்., படித்து இருக்க வேண்டும் என நியமன விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால், பிரெஞ்சு பி.எட்., புதுச்சேரியில் எந்த கல்லுாரியிலும் இப்போது இல்லை. முக்கியமான புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியில் கூட இல்லை.புதுச்சேரியிலேயே பிரெஞ்சு படிப்பிற்கு பி.எட், இல்லாத நிலையில் பிற மாநிலங்களில் சொல்ல வேண்டியதில்லை. அங்கேயும் பிரெஞ்சு படிப்பிற்கான பி.எட்., இல்லை.அரசின் கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியில் பிரெஞ்சு படிப்பில் பி.எட்., ஆரம்பிக்க 10 ஆண்டுகளுக்கு முன் முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் கிடைக்காததால் கிடப்பில் போடப்பட்டது.இதே போல் தனியார் கல்லுாரி ஒன்றிலும் சில ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சு பி.எட்., இருந்தது. அங்கும் பிரெஞ்சு ஆசிரியர்கள் கிடைக்காததால் கடைசியாக பிரெஞ்சு பி.எட்., கைவிடப்பட்டது.அரசு பள்ளிகளில் பிரெஞ்சு ஆசிரியர் பணியிடங்களில் பற்றாக்குறை தலைதுாக்கியுள்ள சூழ்நிலையில், புதுச்சேரியில் பிரெஞ்சு பி.எட்., படிப்பும் இல்லாதது புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.இப்படியே போனால் அரசு வகுத்துள்ள நியமன விதிகளின் படி, பிரெஞ்சு பி.எட்., முடித்த ஒரு ஆசிரியர்கள் கூட கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அடுத்து, அரசு பள்ளிகளிலும் பிரெஞ்சு வழி கல்வி படிப்படியாக மூடுவிழா காண வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என கல்வியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.பட்டதாரிகள் கொந்தளிப்பு புதுச்சேரியில் மட்டுமின்றி, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பிரெஞ்சு பி.எட்., இல்லாத நிலையில் அப்புறம் எதற்கு பிரெஞ்சு ஆசிரியர் நியமன விதிகளில் பி.எட்., குறிப்பிடப்பட்டுள்ளது என, பிரெஞ்சு பட்டதாரி இளைஞர்கள் சரமாரியாக கேள்வி எழுப்புகின்றனர்.'ஒன்னு நியமன விதிகளில் காலத்திற்கேற்ப திருத்தம் செய்யுங்க; அதாவது பிரெஞ்சு பி.எட்., தேவை என்பதை நீக்கிவிடுங்கள் அல்லது பி.எட்., படிப்பினை கல்வியியல் கல்லுாரியில் கொண்டு வாங்க' என்கின்றனர் கொந்தளிப்புடன்.ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பிரெஞ்சு மொழியில் பி.ஏ., எம்.ஏ., முடித்துவிட்டு பல்லாண்டுகளாக வேலைக்காக காத்திருக்கின்றனர்.எனவே, தற்காலிக அடிப்படையிலாவது இவர்களுக்கு உடனடியாக வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.உலகம் முழுதுமே பிரெஞ்சு ஆசிரியர் பணிக்கு வாய்ப்பு கதவுகள் திறந்தே இருக்கிறது. வேலைவாய்ப்பு பற்றி கவலைப்பட தேவையில்லை.எனவே அரசின் கூட்டுறவு கல்வியியல் கல்லுாரி பிரெஞ்சு பி.எட்., ஆரம்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது புதுச்சேரி மாணவர்களுக்கு மட்டுமின்றி இந்தியா முழுதும் பிரெஞ்சு படிக்கும் மாணவர்களுக்கும் புதிய வாய்ப்புகளை திறந்துவிடும்.இல்லையெனில் பிரெஞ்சு கலாசாரத்தின் ஜன்னலாக விளங்கும் புதுச்சேரி தனது பெருமையை இழக்கும்.எங்கெங்கு பிரெஞ்சு கல்வி புதுச்சேரி கலவை கல்லுாரியில் தற்போது பிரெஞ்சு கல்வி இருக்கிறது. இங்கு 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பிரெஞ்சு கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. இது தவிர பான்சியோனா அரசு பெண்கள் பிரெஞ்சு பள்ளி இருக்கிறது. எல்.கே.ஜி., முதல் பத்தாம் வகுப்பு வரை பிரெஞ்சு கல்வி போதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி காரைக்கால், மாகியில் தலா ஒரு பிரெஞ்சு பள்ளிகள் உள்ளன.இதையும் மாத்துங்க பிரெஞ்சு மாணவர்கள் ஆசிரியர் பணியில் சேர டிகிரி, பி.எட்., உடன் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பிராந்திய மொழியும் சேர்த்து படித்திருக்க வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்படுகிறது. இது, பிரெஞ்சு மாணவர்களுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பிரெஞ்சு மொழி எடுத்து உயர் கல்வி வரை படித்தவர்கள் எப்படி அதே நேரத்தில் மற்றொரு பிராந்திய மொழியை எடுத்து படித்து இருக்க முடியும். இந்த நியமன விதியையும் காலத்துகேற்ப மாற்ற வேண்டும் என, பிரெஞ்சு மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.