உள்ளூர் செய்திகள்

சென்டாக் விளையாட்டு ஒதுக்கீடு தரவரிசை பட்டியல்: டாப் லிஸ்ட்டில் யார் யார்... முழு விவரம் இதோ…

புதுச்சேரி: புதுச்சேரியில் பிளஸ் 2 முடித்துவிட்டு, நீட் அல்லாத பிற தொழிற்கல்வி மற்றும் கலை, அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களா நீங்கள்.. அப்படியென்றால் உங்களுக்கான ஒரு முக்கியமான அப்டேட் இது.ஆண்டுதோறும் உயர்கல்வி சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்திவரும் சென்டாக் நிர்வாகம், தற்போது விளையாட்டுப் பிரிவின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களுக்கான தகுதிப் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.விளையாட்டுத் துறையில் சாதனை படைத்து, அதே நேரத்தில் படிப்பிலும் கவனம் செலுத்தி இந்தத் தரவரிசைப் பட்டியலில் முதல் சில இடங்களைப் பிடித்திருக்கும் அந்தச் சாதனை மாணவர்கள் யார்? யாருக்கெல்லாம் இடம் கிடைத்திருக்கிறது என்பதையும் சென்டாக் வெளியிட்டுள்ளது.வெளியாகியுள்ள இந்த விளையாட்டுப் பிரிவுத் தரவரிசையில் 650 மதிப்பெண்கள் பெற்று அசத்தலாக முதலிடத்தைப் பிடித்துள்ளார் மாணவர் விஷ்ணு பிரசாத். 515 மதிப்பெண்களுடன் மாணவர் லோகநாத் இரண்டாம் இடத்தைக் கைப்பற்றியுள்ளார். 340 மதிப்பெண்கள் பெற்ற மாணவி விலாசினி பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். 325 மதிப்பெண்களுடன் மாணவி ஈஷா நான்காம் இடத்தை உறுதியாக்கியுள்ளார்.விளையாட்டு மைதானத்தில் மட்டுமல்லாது, தரவரிசைப் பட்டியலிலும் முன்னணி இடங்களைப் பிடித்து இந்த மாணவர்கள் அசத்தியிருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டு விளையாட்டுப் பிரிவின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சென்டாக் குழுவினரால் மிகக் கடுமையான பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன.சான்றிதழ்களின் உண்மைத்தன்மை, விளையாட்டுப் போட்டிகளின் தரம் மற்றும் மதிப்பெண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், விளையாட்டு வீரர்கள் வரிசையில் மொத்தம் 221 மாணவர்கள் தகுதியானவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.அதே வேளையில், போதிய ஆவணங்கள் இல்லாதது மற்றும் விதிமுறைகளுக்குப் பொருந்தாத காரணங்களால் 309 மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது பல மாணவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தாலும், விதிமுறைகளின்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சென்டாக் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.இந்த அறிவிப்பில் மிக முக்கியமான ஒரு குறிப்பையும் சென்டாக் வெளியிட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த விளையாட்டுப் பிரிவுத் தகுதிப் பட்டியலானது, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் இறுதித் தீர்ப்பிற்கு உட்பட்டது என, தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.நீதிமன்ற வழக்குகளின் போக்கிற்கு ஏற்ப இதில் மாற்றங்கள் வரலாம் என்பதால், மாணவர்கள் இந்த விதியை மனதில் கொள்ள வேண்டும். கல்லுாரி சேர்க்கைக்கான அடுத்தடுத்த கலந்தாய்வு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தகுதிப் பட்டியலில் இடம்பெற்ற மாணவர்கள் தங்கள் கலந்தாய்வு அழைப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்