உள்ளூர் செய்திகள்

மைதானத்தில் பூங்கா அமைக்கும் பணி நிறுத்தம் : மாவட்ட கல்வி அதிகாரி தலைமையில் ஆய்வு

பந்தலுார்: நெல்லியாளம் நகராட்சி சார்பில், பந்தலுாரில் பூங்கா அமைப்பதற்காக, 91 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த மார்ச் மாதம் பணி துவக்கப்பட்டது.நகராட்சிக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ள நிலையில், அவற்றை நில அளவை செய்து மீட்டு பூங்கா அமைப்பதற்கு பதில், அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பூங்கா அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஆரம்பத்திலேயே முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது நல அமைப்புகள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்த போதும், நகராட்சி நிர்வாகம், 'இந்த இடம் நகராட்சிக்கு சொந்தமானது,' எனக்கூறி பணியை மேற்கொண்டனர்.இந்நிலையில், பள்ளி கட்டடம் முன்பாக பணி மேற்கொண்ட நிலையில், கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், அம்பேத்கர் மக்கள் இயக்கம், பள்ளி மேலாண்மை குழு சார்பில், மாவட்ட கலெக்டருக்கு புகார் அனுப்பபட்டது. தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் நந்தகுமார் தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.அதில், '1968 ஆம் ஆண்டு அப்போதைய நெல்லியாளம் பேரூராட்சி மூலம் இந்த இடம் பள்ளி கல்வித் துறைக்கு தானமாக வழங்கப்பட்டது. அந்த இடத்தில் தற்போது பூங்கா அமைக்கப்பட்டு வருவதும், இடம் பள்ளி சார்ந்த பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிய வந்துள்ளது.அதிகாரிகள் கூறுகையில், இது குறித்த அறிக்கை மாவட்ட கலெக்டருக்கு சமர்ப்பித்து, அவரின் உத்தரவுக்கு பின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை பள்ளி மைதானத்தில் பூங்கா அமைக்கும் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என்றனர்.ஆய்வின்போது, பள்ளி தலைமை ஆசிரியர் தண்டபாணி மற்றும் ஆசிரியர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்ரமணியம், காந்தி சேவா மைய அமைப்பாளர் நவுசாத், அம்பேத்கர் மக்கள் இயக்க நிர்வாகி இந்திரஜித், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பேபி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்