உள்ளூர் செய்திகள்

டிசா பள்ளி கட்டடங்களின் நிறம் ஆரஞ்சுக்கு மாற்ற பா.ஜ., உத்தரவு; எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பு

புவனேஸ்வர்: ஒடிசாவில் அனைத்து பள்ளி கட்டடங்களின் நிறத்தையும், ஆரஞ்ச் வண்ணத்திற்கு மாற்றும் ஆளும் பா.ஜ., அரசின் உத்தரவுக்கு, எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.ஒடிசாவில் பா.ஜ.,வைச் சேர்ந்த மோகன் சரண் மஜி முதல்வராக உள்ளார். அந்த மாநிலத்தில், 24 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியை வீட்டுக்கு அனுப்பி விட்டு, கடந்த ஆண்டு முதல் பா.ஜ., ஆட்சியில் அமர்ந்துள்ளது.இந்நிலையில், சமீபத்தில் பள்ளி கட்டடங்களை ஆரஞ்ச் நிறத்திற்கு மாற்ற வேண்டும் என, அந்த மாநில அரசு, அனைத்து மாநில கலெக்டர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.அதை எதிர்த்து, பிஜு ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரசன்ன ஆச்சார்யா நேற்று கூறியதாவது: ஆளும் பா.ஜ.,வின் செயல் கடும் கண்டனத்துக்கு உரியது. பள்ளி கட்டடங்களின் நிறத்தை மாற்றுவதால், பள்ளி மாணவர்களின் நிலைமை மாறிவிடப் போகிறதா; இதில் என்ன அர்த்தம் இருக்கிறது. அல்லது பள்ளி மாணவர்களுக்கு புதிய உற்சாகம் பிறந்து விடப் போகிறதா?பள்ளி மாணவ - மாணவியர் மத்தியில் பா.ஜ.,வுக்கு ஆதரவான மனப்பான்மையை மறைமுகமாக ஏற்படுத்தும் முயற்சி தான் இது. அரசின் பணம்தான் வீணாகுமே தவிர, மாணவர்களின் மனநிலை மாறப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மாநில கல்வி அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த நித்யானந்த் கோண்ட் கூறும் போது, முந்தைய பிஜு ஜனதா தளம் ஆட்சியில், பள்ளிக் கட்டடங்களின் நிறம், அவர்களின் கட்சிக் கொடியில் உள்ள வண்ணங்களான பச்சை, வெள்ளையாக மாற்றப்பட்டது.பள்ளி மாணவர்களின் சீருடையும் அந்த நிறத்திற்கு மாற்றப்பட்டது. மாணவர்கள் மத்தியில் நேர்மறையான எண்ணங்களை விதைப்பதற்காக இப்போது நிற மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வண்ணத்தால் பள்ளிகளும் பார்க்க நன்றாக இருக்கும் என்றார்.புதிய இல்லத்தில் குடியேறிய முதல்வர்ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜி நேற்று முதல், தன் புதிய அரசு இல்லத்திற்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடிபெயர்ந்தார். 25 ஆண்டுகளாக முதல்வர்கள் வசிக்காத அந்த வீடு, புதிய முதல்வரை வரவேற்றது. புதிய அரசு வீட்டில் கிரஹப்பிரவேசம் நடந்தது. இதற்கு முன், கடந்த 2000ம் ஆண்டு வரை முதல்வர் இல்லமாக இருந்த அந்த கட்டடத்தில் முதல்வர்கள் ஜே.பி.பட்நாயக் மற்றும் கிரிதர் காமாங் வசித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்