உள்ளூர் செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு முக்கியம் - துணைவேந்தர் பிரகாஷ் பாபு வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பிரகாஷ் பாபு, சுற்றுச்சூழலை பாதுகாக்க மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.உலக சுற்றுச்சூழல் தினம் 2025-ஐ முன்னிட்டு, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் இந்திய விலங்கியல் ஆய்வு மையம் மற்றும் அந்தமான் நிகோபர் பிராந்திய மையம் இணைந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அவர், அந்தமான் நிகோபர் தீவுகள் மாசு இல்லாத நகரமாக உள்ளாதாக கூறினார்.மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் உணவுச் சங்கிலியில் நுழைந்து, மனித உடலுக்கு தீங்கு விளைவிப்பதுடன், புற்றுநோய்க்கு காரணமாகவும் இருக்கலாம் என்றார். பொதுமக்கள் ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்றும், பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மாணவர்கள் தங்கள் வீடுகளில் மற்றும் பள்ளிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, பிளாஸ்டிக் இல்லாத சூழலை உருவாக்க முயல வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆண்டில் ஒருநாள் கொண்டாட வேண்டிய ஒன்று அல்ல, வருடம் முழுவதும் தொடரும் நடவடிக்கைகளாக அமைய வேண்டும் என்றார்.இதையடுத்து, பேராசிரியர் பிரகாஷ் பாபு அந்தமான், நிகோபார் தீவுகளில் உள்ள இந்திய விலங்கியல் ஆய்வு அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார்.இந்த நிகழ்வில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் முன்னாள் இயக்குநர் ராமகிருஷ்ணா, பல்லவி சர்க்கார், டாக்டர் லால்ஜி சிங், பேராசிரியர் எஸ். கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில், இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் கூடுதல் இயக்குநர் டாக்டர் சிவராமன் வரவேற்புரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்